தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த 17 மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து மாணவியை அதிக வேலை வாங்கி மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக விடுதிக் காப்பாளர் சகாயமேரியை கைது செய்தனர். ஆனால், விடுதிக் காப்பாளர் உள்ளிட்டோர் மதம் மாறுமாறு வற்புறுத்தியதால் மாணவி தற்கொலை செய்து கொண்டார் என பெற்றோர் புகார் எழுப்பினர்.
இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மாணவியின் தந்தை முருகானந்தம் மனுத் தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிமன்றம் தஞ்சாவூர் மாவட்ட நீதிபதியால் நியமிக்கப்படும் குற்றவியல் நீதித்துறை நடுவர் முன் பெற்றோர் ஆஜராகி தங்களது வாக்குமூலத்தைத் தெரிவிக்கலாம் என உத்தரவிட்டது.
இதன்படி, தஞ்சாவூர் மூன்றாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் சி. பாரதி முன்னிலையில் மாணவியின் தந்தை முருகானந்தம், சித்தி சரண்யா ஞாயிற்றுக்கிழமை ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். இந்த வாக்குமூல அறிக்கை உயர்நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. அப்போது, மாணவி பேசியதாகக் கூறப்படும் வீடியோ பதிவை தஞ்சாவூர் வல்லம் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன்படி, வீடியோ பதிவு கொண்ட செல்போனை தஞ்சாவூர் வல்லம் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆர். பிருந்தாவிடம் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் அரியலூர் மாவட்டச் செயலர் பி.முத்துவேல் கடந்த 25ஆம் தேதி ஒப்படைத்தார். இந்நிலையில், மைக்கேல்பட்டி கிராம மக்கள் மற்றும் இந்துக்கள், இஸ்லாமியர்கள் சமூகத்தினர், தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலீவரிடம் மனு அளித்துள்ளனர். அதில், எங்கள் ஊரில் ஐந்து தலைமுறையாக வாழ்ந்து வருகின்றோம். இங்கு கிறிஸ்துவர்களே அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். இது நாள் வரை சகோதரத்துவத்தோடு வாழ்கின்றோம். எங்கள் குழந்தைகளும் தூய இருதய பள்ளியில் தான் படித்து வருகின்றார்கள்.
நல்ல ஒழுகத்தையும், கல்வியும் கொடுத்து வந்த இப்பள்ளியின் மீதும், எங்கள் ஊரின் மீதும் மாணவியின் மரணத்தை வைத்து மதரீதியான கட்சிகளும், அமைப்புகளும் எங்களூரில் சகோதரத்துடனும் ஒற்றுமையுடன் மத நல்லிணகத்தோடு வாழ்வை சீர்கலைக்க முயற்சிக்கின்றார்கள். இது நாள் வரை எந்த ஒரு பிரச்சனையும் நடந்தது இல்லை. இப்பள்ளி 163 ஆண்டுகளாக இயங்கி வருகின்றது. மொத்த மாணவர்களில் 60 சதவீதம் மேல் இந்து மதத்தினர் படித்து வருகின்றார்கள், இப்பள்ளியில் மதமாற்ற முயற்சி இதுவரை நடந்ததில்லை. நாங்கள் இதனை வன்மையாக கண்டிக்கின்றோம், பலதரப்பட்ட குழக்கள் அமைப்பதையும் விசாரிப்பதை தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
மாவட்ட கலெக்டரிடம் கூறுகையில், நாங்கள் அனைவரும் ஒற்றுமை இருக்கின்றோம். சநேதோஷமாகவும் இருக்கின்றோம். லாவன்யா வைத்து எங்களை மதரீதியாக துன்புறுத்தாமல், பிளவு படுத்தாமல் பார்த்து கொள்ளவேண்டும். பாஜக மற்றும் எந்த குழுவும் விசாரிக்க அனுமதிக்க கூடாது என்று தெரிவித்தனர்.
மைக்கேல்பட்டி பொது மக்கள் நிருபர்களிடம் கூறுகையில், இந்து, முஸ்லீம், கிறிஸ்துவர்கள் ஒற்றுமையாக இருக்கின்றோம். மறைமுகமாக எங்களிடம் நாங்கள் சொல்வது போல், அவர்களுக்கு எதிராக பேட்டி கொடுங்கள் என்று எங்களை தொந்தரவு செய்கிறார்கள். இப்பள்ளியால் இந்தியாவிற்கே பெருமை தான். மாணவி மரணத்தை வைத்து பிரச்சனை செய்ய வேண்டும் என ஆசைப்படுகிறார்கள். மாணவிக்கும் மதமாற்றத்திற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. எங்களை வேறு யாரும் எந்த குழுவும் எங்கள் ஊருக்குள் வந்து விசாரணை வரக்கூடாது, தொந்தரவு செய்யக்கூடாது.
எங்களிடம் உள்ள மத ஒற்றுமையை சீர்குலைத்திட கூடாது. எங்கள் ஊருக்கு பாதுகாப்பு வேண்டும். ஒரு பிரிவினர், இப்படி சொல்லுங்கள், அப்படி சொல்லுங்கள் என்று சொல்வது இருக்க கூடாது. சிலர் எங்களை நிர்பந்தம் செய்கிறார்கள் என்றனர். இதில் மைக்கேல்பட்டியை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராஜ், ஊராட்சி மன்ற தலைவர் தனசெல்விசார்லஸ், அஜீஸ், அப்பாஸ், பள்ளியில் ஒய்வு பெற்ற ஆசிரியர் குருமூர்த்தி, ஊராட்சி மன்ற துணை தலைவர் டேவிட் மற்றும் ஏராளமானோர் வந்திருந்தனர்.