சென்னை திருவொற்றியூர் மேற்கு பகுதி திமுக செயலாளர் பொறுப்பில் இருந்து எம்எல்ஏ கே.பி.சங்கர் நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து, திமுக  பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில்,  ”திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் அவர்கள் கழகக் கட்டுப்பாட்டை மீறி வருவதால், திருவொற்றியூர் மேற்குப் பகுதிக் கழகச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 




கடந்த சட்டமன்ற தேர்தலில் திருவள்ளூர் மாவட்டத்தில் 10 இடங்களிலும் போட்டியிட்ட திமுக, அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றது. அதில் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்ட கே.பி.சங்கர், பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி முதல் முறையாக சட்டமன்றத்திற்கு தேர்வானார். முன்னதாக,சென்னை மாநகராட்சியில் 5 வது வார்டு கவுன்சிலராக இருந்துவந்த கே.பி.சங்கர், தற்போது திருவொற்றியூர் மேற்குப் பகுதி கழகச் செயலாளராகவும் பொறுப்பு வகித்து வந்தார். அதனைதொடர்ந்தே, கடந்த சட்டமன்ற தேர்தலின்போது திமுக, திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட இவருக்கு வாய்ப்பு அளித்தது. வாய்ப்பை பயன்படுத்தி கொண்ட கே.பி.சங்கர் வெற்றியும் பெற்று சட்டமன்ற உறுப்பினரானார். 


சமீபத்தில், திருவொற்றியூரில் நடந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டட விபத்தின்போது, நேரில் சென்று பார்வையிட்ட கே.பி.சங்கர் பாதிக்கப்பட்ட குடியிருப்பு மக்களுக்கு புதிய வீடுகளை கட்டி தருவதாகவும், வீட்டிற்கு தேவையான பொருட்களை தன் சொந்த செலவில் வாங்கி தருவதாக உறுதி அளித்தார். 


இந்தநிலையில், திருவொற்றியூர் தொகுதியின் ஆளும் திமுக எம்எல்ஏ கே.பி.சங்கர் மற்றும் அவரது கூட்டாளிகள் சென்னை மாநகராட்சி உதவிப் பொறியாளரை தாக்கி, கடந்த புதன்கிழமை இரவு திருவொற்றியூர் நடராஜன் தோட்டத்தில் சாலை அமைக்கும் பணியையும் நிறுத்தியுள்ளனர். 


திருவொற்றியூர் தொகுதியில் ரூ.3 கோடிக்கு மாநகராட்சி சாலை இணைப்பு உள்கட்டமைப்பு நிறுவனத்துக்கு சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டு, நடராஜன் கார்டன் முதல் தெரு, இரண்டாவது மற்றும் மூன்றாவது தெருவில் சாலைகள் அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வந்தது.


அப்பொழுது, எம்.எல்.ஏ., தனது ஆட்களுடன் அந்த இடத்திற்கு வந்து சாலை போடும் பணியை நிறுத்துமாறு கூறியுள்ளார். இதையடுத்து, உதவி பொறியாளர் தலையிட்டு பிரச்னையை தீர்க்க முயற்சி செய்தபோது, அவரை எம்.எல்.ஏ தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, எழுந்த புகாரின் அடிப்படையில் கட்சி பதவியில் இருந்து நீக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார். எம்எல்ஏ கே.பி.சங்கர் முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி.சாமியின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண