தமிழகத்தில் குடியரசுத் தலைவர், பிரதமர், ஆளுநர் முதலமைச்சர் உள்ளிட்டோர் சுற்றுப்பயணங்களின் போது அவர்களின் பாதுகாப்பு வாகனங்கள் செல்லும் வழி முழுவதும் காவலர்கள் பாதுகாப்புகாக நிறுத்தப்படுவது வழக்கமாக உள்ள நிலையில், முதற்கட்டமான முதல்வர் தனது பயணங்களின்போது பாதுகாப்பு பணிகளில் பெண் காவலர்களை ஈடுபடுத்தக்கூடாது என கூறி உள்ளது பெண் காவலர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.



தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று ஒருமாதம் கடந்துவிட்ட நிலையில், திருச்சி, சேலம், ஈரோடு, கோவை, மதுரை, திருவாரூர், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கொரோனா தடுப்பு பணிகளுக்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த சுற்றுப்பயணத்தின் போது முதல்வரின் பாதுகாப்பு பணிக்காக சாலை ஓரங்களில் ஏராளமான ஆண் மற்றும் பெண் காவலர்கள் ஈடுபட்டு வந்தனர். மேலும் முதலமைச்சர் தனது இல்லத்தில் இருந்து தலைமைச் செயலகத்திற்கு செல்லும் வழியான காமராஜர் சாலையிலும் பெண் காவலர்கள் தினமும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுவது வழக்கம். இவ்வாறு பாதுகாப்பு பணிகாக சாலையோரங்களிலேயே மணிக்கணக்கில் காத்திருக்கும் சூழல் காவலர்களுக்கு உள்ளதால், பெண்கள் தங்களின் உடல் உபாதைகளையும் அவசரத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத சூழல் இருந்துவந்தது.


இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறப்பித்துள்ள வாய் மொழி உத்தரவில், தனது பாதுகாப்பு பணிகளில் பெண் காவலர்களை ஈடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதலமைச்சரின் இந்த உத்தரவை நடைமுறைப்படுத்துமாறு, மண்டல ஐஜிக்கள், மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட எஸ்.பிக்களுக்கு டிஜிபி திரிபாதி அறிவுறுத்தியுள்ளார்.