மதுரை மாநகராட்சியில் 2006 முதல் 2007 வரை தினக்கூலி அடிப்படையில் தூய்மைப் பணியாளர்களாக நியமிக்கப்பட்டவர்களில்  389 பேர் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி 2010ஆம் ஆண்டு தொழிலாளர் ஆய்வாளர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த தொழிலாளர் ஆய்வாளர் 309 பேரையும் பணி நிரந்தரம் செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து மாநகராட்சி சார்பிலும், தொழிலாளர் ஆய்வாளர் உத்தரவை அமல்படுத்தக்கோரி தூய்மை பணியாளர்கள் சார்பிலும் உயர் நீதிமன்ற கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த தனி நீதிபதி, மாநகராட்சி மனுக்களை தள்ளுபடி செய்தும், தூய்மை பணியாளர்களின் மனுக்களை ஏற்று அவர்களை பணி நிரந்தரம் செய்யவும் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி மதுரை மாநகராட்சி ஆணையர் உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்தார். 

 

இதனை நீதிபதிகள் சுப்பிரமணியன், சதீஷ்குமார் அமர்வு விசாரித்தது. அப்போது நீதிபதிகள், "மத்திய, மாநில அரசுகள் தங்களை மக்கள் நல அரசுகள் என சொல்லி வருகின்றன. ஆனால் அதற்கு மாறாக அரசு துறைகள், மாநகராட்சிகளில் நிரந்தர பணியாளர்கள் பார்க்கும் பணிகளில்  தற்காலிக பணியாளர்களை நியமித்து தொழிலாளர்கள் விரோத நடவடிக்கை மேற்கொள்கின்றன.  பெரும்பாலான நேரங்களில் தற்காலிக நியமனங்கள் பணி விதிகளை பின்பற்றாமல் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் மூலம் பொது வேலை வாய்ப்பில் சம வாய்ப்பு மறுக்கப்படுகிறது. நிரந்தர பணியிடங்களில் குறைந்த சம்பளத்தில் தற்காலிக அடிப்படையில் பணியாளர்களை நியமித்து தொழிலாளர்களை சுரண்டும் போக்கை தடுக்க வேண்டும். 

 

பணி நியமனங்களுக்கு தனி விதிகள் உள்ளன. இருப்பினும் உத்தரவுகள் பிறப்பித்த இதுபோன்ற பின்வாசல் நியமனங்களும் நடைபெறுகின்றன. எதிர்காலத்தில் நிரந்தர பணியாளர்களை மேற்கொள்ளும் பணியிடங்களில் குறைந்த ஊதியத்துக்காக தற்காலிக அடிப்படையில் பணியாளர்களை நியமிக்கும் போக்கை அரசு நிறுத்தும் என நம்புகிறோம்" என குறிப்பிட்டு தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்த தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டுள்ளனர்.