1996-ஆம் ஆண்டில் மத்தியில் அந்தக் கட்சியின் அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான ஆட்சியைக் கவிழ்த்தபோதும் சரி, அத்தனை மாநிலங்களும் ஏற்றுக்கொண்ட நீட் தேர்வை ஒற்றை மாநிலமாகத் தற்போது எதிர்த்துக் கொண்டிருக்கும்போதும் சரி தமிழ்நாட்டின் ஆளும் திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொருத்தவரை தேசியக் கட்சியான பாரதிய ஜனதா கட்சி என்பது ‘ராங் பார்ட்டி’.
முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதுபோல அடிப்படைக் கொள்கையிலேயே முரணான கட்சிகள் என்பதால் இருகட்சிகளுக்கும் இடையிலான டாம் அண்ட் ஜெர்ரி ஆட்டத்துக்குப் பஞ்சமில்லை எனலாம். 1996-ஆம் ஆண்டில் வாஜ்பாயின் அரசைக் கவிழ்த்த அன்றைய தி.மு.க. ‘வாஜ்பாய் நல்லவர்தான்...அவர் இருக்கும் கட்சிதான் பிரச்னை...’ என நாசுக்காக நகர்ந்துகொண்ட கருணை கூட தற்போதைய தி.மு.க.வுக்கு மத்தியில் இருக்கும் மோடி அரசாங்கத்தின் மீது இல்லை.
ஆட்சிக்கு வருவதற்கு முன்பான காலம்வரை #GoBackModi என பகிரங்கமாக ட்ரெண்ட் செய்த உடன்பிறப்புகள் அண்ட் கோ., கடந்த மே மாதம் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு வெளிப்படையாகவே மோடியுடன் மோதத் தொடங்கிவிட்டார்கள்.
’ஒன்றியம்’ என்பதில் சி.என்.அண்ணாதுரை காலந்தொட்டே உறுதியாக இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்றதும் மத்திய ஆட்சியைக் குறிக்கும்போதெல்லாம் ஒன்றிய அரசு எனச் சொல்வதில் உறுதியாக இருக்கிறது.
மாநிலத்தின் இந்த எதிர் நிலைப்பாட்டில் பிரதமர் மோடி அரசு மௌனம் காத்தாலும் தமிழ்நாடு பாஜக கொந்தளித்துக் கொண்டுதான் இருக்கிறது, ‘இதுநாள் வரையில்லாமல் இப்போது என்ன புதிதாக ஒன்றியம்?’ என விமர்சித்துள்ளனர் அந்தக் கட்சியின் முக்கிய முகங்கள். 'குதிரையும் இயந்திரமும் ஒன்றா’ எனக் குதர்க்கக் கேள்வி எழுப்பியுள்ளார் கட்சியின் முன்னாள் தேசியச் செயலாளர் எச்.ராஜா.
இந்த முட்டல் மோதல் ஒன்றியத்தோடு மட்டும் முடிந்துவிடவில்லை. புதிய கல்விக் கொள்கை தொடர்பாக மத்திய அரசு கூட்டிய கூட்டத்தில் எடுத்த எடுப்பிலேயே ஆப்சென்ட் ஆனது மாநில அரசு. ‘புதிய கல்விக் கொள்கையில் திருத்தமில்லாமல் தமிழ்நாட்டில் அனுமதிக்கமாட்டோம். நீட் நுழையவே நுழையாது’ என்பதை பள்ளிக்கல்வியும் உயர்கல்வியும் மாறிமாறிச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
இதுதவிர தடுப்பூசி முதல் ஆக்சிஜன் வரை என கொரோனா பேரிடர் காலத்தில் அத்தனைக்குமே மத்திய அரசுடன் மல்லுக்கட்டிக்கொண்டிருக்கிறது மாநில அரசு. சிதம்பர ரகசியத்தை விட பெரும் ரகசியமாகக் கொரோனா தடுப்பூசியின் கையிருப்புகள் உள்ள நிலையில், ’தமிழ்நாட்டிடம் மொத்தமே 1060 கொரோனா தடுப்பூசிகள்தான் உள்ளன. அதுவும் சென்னையில் மட்டும்தான் உள்ளது. மீதமுள்ள 36 மாவட்டங்களில் தடுப்பூசியே இல்லை’ எனப் பத்திரிகையாளர்களிடம் பகிரங்கமாகப் போட்டுடைத்தார் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம். இத்தனைக்கும் இதுபற்றி வெளியே சொல்லவே கூடாதென்று கட்டளை பிறப்பித்திருந்தது மத்திய அரசு.
இது ஒருபக்கமிருக்க எள்ளும் கொள்ளும் வெடிப்பதாக நகர்ந்துகொண்டிருக்கிறது நிதி அமைச்சர் பி.டி.ஆர்., மற்றும் பாரதிய ஜனதா மோதல்.கோயில்கள் மீட்டெடுப்பு விவகாரத்தில் ஜக்கி வாசுதேவ் மீது அவர் வைத்த தொடர் விமர்சனங்களால் வெகுண்ட பாரதிய ஜனதாவின் கணைகள் பூர்வீகம், பாட்டி, தாத்தா எனத் தனிமனிதத் தாக்குதல் ரகமாகத் டேக் ஆஃப் எடுத்துள்ளன.
நிற்க! இவை அத்தனையும் மு.க.ஸ்டாலின் அரசு பொறுப்பேற்ற ஒரு மாதத்தில் நடந்தவை. தேசியமும் திராவிடமும் மோதிக்கொள்ளும் ஆடு-புலி ஆட்டத்தின் ட்ரெயிலர். இதில் ஆடு யாரென்பதும் புலி யாரென்பதும் முடிவு செய்யும் மெயின் பிக்சர் இன்னும் ஐந்தாண்டுகளுக்கு பாக்கியிருக்கிறது.