விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் பிரபல மேடை பேச்சாளரும், அரசியல்வாதியுமான நாஞ்சில் சம்பத் இணைந்துள்ளது அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய பேசுப்பொருளாக மாறியுள்ளது.
நெருங்கும் சட்டமன்ற தேர்தல்
2026ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களுடைய களப்பணியை மிக தீவிரமாக ஆற்றி வருகிறது. அதிமுக - பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. திமுக தொடர்ந்து 2வது முறையாக ஆட்சிக்கு வருவதற்கான அனைத்து பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. மக்களை சந்தித்து தற்போதைய ஆட்சியில் செயல்படுத்தப்பட்டுள்ள நலத்திட்டங்கள் குறித்து தொண்டர்கள் எடுத்துரைத்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.
இதனைத் தவிர திமுகவின் கூட்டணி கட்சிகள், தேமுதிக, பாமக, அமமுக போன்ற கட்சிகள் நிலைப்பாடு என்னவென்று எதிர்பார்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் மிகப்பெரிய கவனம் பெறுவதற்கான காரணம் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முதன்முதலில் போட்டியிடுவது தான்.
தவெகவுக்கு வரும் முக்கிய தலைவர்கள்
இதனிடையே திமுக கூட்டணி வலுவுடன் இருக்க, அதிமுகவில் கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்தது. ஓ.பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், செங்கோட்டையன் போன்ற முன்னணி தலைவர்கள் கட்சியை விட்டு நீக்கப்பட்டனர். சிலர் மாற்றுக் கட்சிகளில் இணைந்த நிலையில், செங்கோட்டையன் யாரும் எதிர்பாராதவிதமாக தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். இந்த நிலையில் நாஞ்சில் சம்பத்தும் இணைந்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் மணக்காவிளை என்னும் ஊரை சார்ந்தவர் நாஞ்சில் சம்பத். திராவிட கொள்கைகளில் மிகுந்த பற்றுக் கொண்டிருந்த அவர் திமுகவின் தலைமைக் கழக பேச்சாளராக இருந்தார். பின்னர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுடன் இணைந்து அரசியல் களத்தில் செயல்பட்டார். தொடர்ந்து அக்கட்சியில் இருந்து விலகி மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டதன்பேரில் அதிமுகவில் இணைந்தார். அவருக்கு கொள்கை பரப்பு துணை செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இதன்பின்னர் 2016ம் ஆண்டு அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக பிரிந்தபோது இவர் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக இருந்தார். தொடர்ந்து டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். ஆனால் அந்த கட்சி பெயரில் திராவிடம் மற்றும் அண்ணா பெயர் இல்லை என கூறி அங்கிருந்து வெளியேறினார். அதன்பிறகு எந்த கட்சியிலும் இணையாமல் மேடை பேச்சாளராக திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார். சமீபத்தில் மதிமுகவில் இருந்து பிரிந்த மூத்த தலைவர் மல்லை சத்யா திராவிட வெற்றிக் கழகம் கட்சியைத் தொடங்கியபோது அதன் மேடைகளில் நாஞ்சில் சம்பத்தும் இடம் பெற்றிருந்தார். இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் அவர் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.