மதுரை மாநகர் மாவட்டத்தின் சார்பில் மாவட்ட செயலாளர்களுக்கான தேர்தல் நடைபெற்று முடிவடைந்து அதில் மாவட்ட செயலாளராக கோ.தளபதி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் ஏற்கனவே தேர்தலின் போது மாவட்ட செயலாளரான கோ. தளபதி அணியினரும் மற்றொரு அணியாக அதலை செந்தில் அணியினராக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அணியினரும் இரண்டு தரப்பினராக மோதிக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் இருவருடைய ஆதரவாளர்களையும் பாண்டிச்சேரி மற்றும்  மகாபலிபுரம் பகுதியில் தனியார் விடுதிகளில் தங்க வைத்து அவர்களை பாதுகாத்தார்கள்.



அந்த அளவிற்கு உச்சகட்டத்தை நிலையில் மீண்டும் தளபதி மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று மதுரையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமையில் ஸ்டாலின் திமுக தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டதை முன்னிட்டு மதுரை மடீட்சியா அரங்கில் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முழுவதுமாகவே நிதி அமைச்சரின் ஆதரவாளர்கள் மட்டும் வந்திருந்த நிலையில் கட்சி சார்பில் நடக்கக்கூடிய நிகழ்ச்சியை மாவட்டச் செயலாளர் கோ.தளபதி புறக்கணித்தார். மேலும் அமைச்சர்களும் மற்ற திமுக சட்டமன்ற உறுப்பினர்களும் புறக்கணித்தனர்.



 

இந்த நிலையில் மேடையில் பேசிய நிதி அமைச்சர் தியாகராஜன்..,” தலைவரின் பேச்சை மீறி சிலர் செய்நன்றி மறந்த நிலையில் உள்ளனர். தலைவருக்காக நடத்தப்படக்கூடிய இந்த நிகழ்ச்சியில் அவர்களும் புறக்கணித்து யாரும்  வரக்கூடாது என மிரட்டல் விடுத்தது ஆச்சிரியத்தை  அளிக்கிறது. அவர் சிறிய மனிதராக நடந்து கொள்ளக்கூடாது, சுயமரியாதைக்காக எதையும் விட்டுக் கொடுக்க மாட்டேன். மதுரையில் தலைவரின் பேச்சை மீறி சிலர் நடந்துகொள்வது வேதனை அளிக்கிறது. என்னால் பயனடைந்து செய்நன்றி மறந்தவர்கள் உள்ளனர். அவர்களுக்கு ஒருநாள் வீழ்ச்சி வரும். நான் படித்தவன். உண்மையை மட்டும் தான் தலைவரிடம் பேசினேன். நான் பொருளாதார சுதந்திரத்துடன் இருக்கிறேன். ஆனால் சிலருக்கு பொருளாதாரத்தை விட பேராசைபடுகின்றனர்.

 

நான் யாருக்கும் அடிமையாக இருக்க தேவையில்லை. என்ன நடக்குமோ அது விரைவில் நடக்கும். திறமையற்றவர்களை திறமையானவர்களாக காட்ட முடியாது. ஆனால் சுயமரியாதை உள்ளவர்களை மாற்ற முடியாது. சிலர் திமுக கட்சி பொறுப்பை தருவதாக கூறி எனது ஆதரவாளர்களை போனில் அழைத்துள்ளனர். ஆனால் என் ஆதரவாளர்கள் மறுத்துவிட்டனர். இதேவழியில் செல்வோம் சிறப்பாக முடியும்” என்றார். தனது ஆதங்கத்தை மாவட்ட செயலாளருக்கு எதிராக பேசியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நிதியமைச்சர் அளித்த விருந்து நிகழ்ச்சியில் திமுகவினரிடையே உள்ள கோஷ்டிபூசல் வெட்டவெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.