மதுரையில் 3 நாட்களாக பெய்த கனமழை காரணமாக மாட்டுத்தாவணி அருகே பாசன வாய்க்கால்களில் வந்த வெள்ள நீரால் பல்வேறு பகுதிகள் பாதிப்படைந்தது, அதனை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் நேரில் ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து மழை நீரால் பாதிக்கப்பட்ட பொம்மைகள் தயாரித்து விற்பனை செய்யும் 50 க்கும் மேற்பட்ட வட மாநில மக்களை நேரில் சந்தித்த ஆர்.பி.உதயகுமார் அவர்களுக்கு தேவையான அரிசி, கோதுமை மாவு உள்ளிட்ட உணவு பொருட்கள் மற்றும் உணவுகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.பி.உதயகுமார் கூறுகையில்..,” தமிழகத்திற்கு தென்மேற்கு பருவமழையால் கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து நமக்கு நீர் கிடைக்கும் அக்டோபர், நவம்பர் ,டிசம்பர் ஆகிய மூன்று மாதங்களில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைக் காலமாகும் இது நமக்கு தேவையான நீர் அதிகளவில் கிடைக்கும். இந்த காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து மக்களை காப்பது அரசின் கடமையாகும், அந்த அடிப்படையில் தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் தொடர்ந்து அரசை வலியுறுத்தி வருகிறார். கடந்த அம்மா ஆட்சி காலத்தில் எங்களுக்கு கிடைத்த அனுபவத்தை வைத்து, மக்களின் நலனை கருதி தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசிற்கு தொடர்ந்து கூறி வருகிறோம்.
குறிப்பாக மதுரையில் மூன்று நாட்களாக இரவில் மழை பெய்து வருகிறது, இதனால் சாலையில் எல்லாம் மிகவும் குண்டு குழியுமாக உள்ளது .குறிப்பாக மாட்டுத்தாவணி அருகே டி.எம்.நகர் பகுதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது, ஏறத்தாழ 6,00 குடியிருப்புகள் பாதிப்பு அடைந்துள்ளன. இது போன்று தண்ணீர் சூழ்ந்து இருக்கும் பொழுது, நிவாரண முகாம்களில் தங்க வைக்க வேண்டும். வட கிழக்கு பருவ மழையின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிவாரண முகாம்கள் அமைக்கவில்லை, அந்தப் பகுதி மக்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை, பலர் வெளியேறும் சூழ்நிலை உள்ளது. அமைச்சர்கள் பார்வையிட்டு சென்றாலும், குறிப்பாக 3 நாட்கள் மின்சாரம் இல்லாமல் இருந்து வருவதால் குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் உணவு தயாரித்துக் கொடுக்க முடியாமல் தவித்து வருகிறார்கள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வசதி, தங்கும்வசதி, மருத்துவ வசதியுடன் கூடிய நிவாரண முகாம்களை அரசு ஏற்படுத்தி தர வேண்டும்.
அதேபோல் உத்தங்குடி போன்ற பல்வேறு பகுதியில் உடைப்பு ஏற்பட்டுள்ளாக கூறுகிறார்கள் ஆகவே தேவையான மணல் மூட்டைகளை அரசு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். வடகிழக்கு பருவ மழை தொடர்பாக முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டு பல்வேறு தகவலை கூறியுள்ளார். ஆனால் அவர் கூறிய தகவலுக்கும், களத்தில் உள்ள நிலவரத்திற்கும் வேறுபாடு உள்ளது. சென்னையில் பல்வேறு பகுதிகளில் குழிகள் தோண்டப்பட்டுள்ளன. சென்னையில் மழை வடிகால் இணைப்புகள் முடிவு பெறாமல் உள்ளது. பணிகளை 10 நாள்களில் முடிப்போம் என்று கூறினார்கள், ஆனால் கள நிலவரத்தில் வேறுபாடு உள்ளது. 1 மணி நேர மழைக்கே சென்னை தாங்கவில்லை, சென்னையில் முழு நீர் வடிகால், பாதாள சாக்கடை உள்ளிட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் முழுமை பெறாததால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
எடப்பாடியார் ஆட்சியில் வெள்ள தடுப்பு நடவடிக்கைகளும், வெள்ள தணிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டன, குறிப்பாக தமிழகம் முழுவதும் உள்ள 22,558 ஏரிகள், 12,070 நீர் வழித்தடங்கள் மற்றும் கால்வாய்கள் தூர்வார்பட்டன. அதேபோல் 7,030 நீர்நிலை ஆக்கிரமிப்புகள் மீட்கப்பட்டன. குறிப்பாக தமிழகத்தில் 9,627 பாலங்கள்,1,37.074 சிறு பாலங்கள் ஆகியவற்றை சுத்தம் செய்யப்பட்டன. இதன் மூலம் கிராமப்புறங்களில் நீர் செல்லாத வண்ணம் பாதுகாக்கப்பட்டன. இது போன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதால் தான் கஜா புயல் போன்ற காரணங்களில் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படாமல் பாதுகாக்கப்பட்டன. ஆகவே தமிழக அரசு கடந்த அம்மா ஆட்சிக் காலத்தில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால், எந்த உயிர் இல்லாமலும் பொருள் சேதம் இல்லாமல் மக்களை காப்பாற்றலாம்” என கூறினார்.