ஆட்சி மாறினால் பாஜக மீதும் வருமானவரி சோதனை நடைபெறும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடுமையாக விமர்சித்துள்ளார்.
சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் இல்லத்தில் இன்று காலை 8 மணி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்திக்க அனுமதிக்க கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ,எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் ஆகியோர் செந்தில்பாலாஜியின் இல்லத்திற்கு வருகை தந்தனர். ஆனால் அவர்களுக்கு மத்திய ரிசவ் பாதுகாப்பு படையினர் அனுமதி மறுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆர்.எஸ்.பாரதி, “கடந்த 2 நாட்களாக அமித்ஷா தமிழ்நாட்டுக்கு வந்து பேசிய பேச்சுகள் தமிழ்நாட்டு மக்களிடையே பேசுபொருளாக உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் கூட்டத்தில் அமித்ஷாவிடம் பல கேள்விகளை எழுப்பினார்கள். அதற்கு அவரால் பதில் சொல்ல முடியவில்லை. மாறாக பொய்களை சொல்லிவிட்டு சென்றுள்ளார். அதற்கு பின்னால் அதிமுகவின் கட்சி தலைவர்கள் மத்தியில் அண்ணாமலை பேசிய பேச்சு சர்ச்சைக்குரிய விவகாரமாக ஆக்கப்பட்டுள்ளது. இதனால் அதிமுக-பாஜக இடையே கருத்து வேறுபாடு நடந்து வருகிறது.
இதனை திசை திருப்பும் நோக்கில் திமுக ஆட்சியில் ஊழல் நடைபெற்றது என மக்கள் நம்ப வேண்டும் என்பதற்காகவே அமைச்சர் செந்தில்பாலாஜி வீடுகளில் எல்லாம் இன்று சோதனை நடைபெறுகிறது. முந்தைய ஆட்சியில் நடந்த ஊழலை திமுக ஆட்சியில் நடந்த ஊழலை போன்று தோற்றத்தை ஏற்படுத்த திட்டமிட்டு இந்த சோதனை நடக்கிறது. அமைச்சர் செந்தில்பாலாஜியை சந்திக்க வழக்கறிஞர்களான எங்களுக்கே அனுமதி வழங்கப்படவில்லை.
காலை முதல் செந்தில் பாலாஜியின் இல்லத்தில் சோதனை நடைபெறும் நிலையில் அவருக்கு என்ன ஆனது என அறிந்து கொள்ளும் உரிமை எங்களுக்கு உள்ளது. அதிகாரிகளிடம் பணிவோடு கேட்டபிறகும் அமைச்சரை சந்திக்க எங்களுக்கு அனுமதி வழங்கவில்லை. தலைமை செயலாளரிடம் அனுமதி பெற்றுத்தான் , தலைமைச் செயலகத்தில் சோதனை நடத்த வேண்டும். தலைமை செயலாளரிடம் அனுமதி பெற வேண்டும் என்ற விதி மீறப்பட்டுள்ளது.
1976 முதல் இதுபோன்ற பல சோதனைகளை திமுகவினர் பார்த்துவிட்டோம். கடந்த ஆட்சிக் காலத்தில் தலைமைச் செயலகத்தில் சோதனை நடத்தப்பட்டபோது மு.க.ஸ்டாலின் தான் அதனை கண்டித்தார். இன்னும் 10 அமாவாசைகள் தான் உங்களுக்கு காலம். ஆட்சி மாறினால் பாஜக மீதும் வருமானவரி சோதனை நடைபெறும்” என தெரிவித்தார்.