மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்த பிறகு மருத்துவ படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வாக நீட் தேர்வை நடத்தி வருகிறது. நீட் தேர்வு நடத்தத் தொடங்கியது முதலே தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க. என அனைத்து கட்சிகளும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், பா.ஜ.க. தவிர தமிழ்நாட்டில் உள்ள பிரதான கட்சிகள் அனைத்தும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்:
தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியான தி.முக. நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளையும், போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர். இந்த சூழலில், நீட் தேர்வுக்கு எதிராக தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
தி.மு.க. மாணவர் அணி சார்பில் நடத்தப்படும் இந்த ஆர்ப்பாட்டத்தில், தேசிய தேர்வு முகமை நடத்தும் நீட், க்யூட், நெட் தேர்வுகளில் நடந்த குளறுபடி குறித்து தி.மு.க. தலைவர்கள் மக்கள் மத்தியில் பேச உள்ளனர். தி.மு.க.வின் மூத்த தலைவர்களான ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட பலரும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
நீட் தேர்வு:
ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வு நடக்கும்போதும், நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும்போது பல்வேறு வித சர்ச்சைகள் ஏற்பட்டு வருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நீட் தேர்வுக்கு எதிரான மனநிலை நீடித்து வருகிறது. மேலும், நீட் தேர்வு காரணமாக மாணவர்கள் பலரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் தமிழ்நாடு மக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழலில், இந்த முறை வெளியான நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடிகள் இருப்பதாக வெளியான குற்றச்சாட்டுகளும், மதிப்பெண் பட்டியல்களும் தேசிய தேர்வு முகமையின் நம்பகத்தன்மை மீது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிரான மனநிலையை வலுப்படுத்தியுள்ளது. மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.