திருச்சி சிவா வீடு, கார் மீதான தாக்குதலை தொடர்ந்து  தி.மு.க. நிர்வாகிகள் நான்கு பேர் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், நான்கு பேரையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.


திமுக அதிரடி நடவடிக்கை:


திருச்சியில் திமுக எம்.பி. திருச்சி சிவா மற்றும் அமைச்சர் கே.என்.நேரு ஆகிய இரு தரப்பினரின் ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டனர். ஒரே கட்சியைச் சேர்ந்த அமைச்சர், எம்.பி. ஆகியோருக்கு சர்ச்சை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கட்சி தலைமையகத்திற்கும், போலீசாருக்கும் உத்தரவிட்டதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, மோதலில்  ஈடுபட்ட 4 பேரை கட்சியில் இருந்து நீக்கி, ஒழுங்கு நடவடிக்கையை தி.மு.க. தலைமை எடுத்துள்ளது.  காவல்நிலையத்தில் சரணடைந்த 4 பேர் உட்பட மொத்தம் 5 பேரை போலீசார் கைது செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.


கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாலும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால் காஜாமலை விஜய், தி.முத்துச்செல்வம், எஸ். துரைராஜ், வெ. ராமதாஸ் ஆகிய நான்கு பேர்  அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  






எம்.பி. திருச்சி சிவா வீட்டின் மீது தாக்குதல்:


திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தொடங்க உள்ள திட்ட பணிகளையும், முடிவுற்ற  திட்ட பணிகளையும்  தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.  இந்நிலையில் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட எஸ். பி. ஐ., காலனியில் நமக்கு நாமே திட்டத்தில், நவீன இறகுபந்து உள்விளையாட்டு அரங்கத்தை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு  குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்.


இந்த நிகழ்ச்சியில் பங்கேற்போரின் பட்டியலில் எம்.பி., சிவாவின் பெயர் இடம் பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவரது ஆதரவாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.  இந்நிலையில்  அவரது வீடு உள் நியூ ராஜா காலனி வழியாக தான், அந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் சென்றுள்ளனர். அரசு திட்டம் தொடங்கப்படும் நிகழ்ச்சியில் எம்.பி. திருச்சி சிவாவிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பதால் அந்த வழியாக அமைச்சர்கள் கார் செல்கையில், திருச்சி சிவா ஆதரவாளர்கள் கருப்புக் கொடி காட்டியதாக கூறப்பட்டது. கே.என்.நேரு மற்றும் முக்கிய பிரமுகர்கள் காரை நிறுத்தாமல் சென்றுவிட்டதாக சொல்லப்படுகிறது.


விளையாட்டு  அரங்கம் திறப்பு  விழா முடிந்து, அமைச்சர் புறப்பட்டு சென்றதும், அவரோடு வந்த ஆதரவாளர்கள் எம்.பி.  சிவாவின் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த கார் மட்டும் வீட்டு, ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி நீதிமன்ற காவல் நிலையத்தில் சிவா ஆதரவாளர்கள் மீது அமைச்சர் நேரு தரப்பினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பெண் போலீசாருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


இதோடு மட்டுமல்லாமல், இரு அமைச்சர்களின் ஆதாரவாளர்கள் காவல் நிலையத்திலும் மோதலில் ஈடுபட்டதாக வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரே கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களின் ஆதாரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இத் தகவல் அறிந்தவுடன், கட்சி தலைமையகத்திற்கும் போலீசாருக்கும் நடவடிக்கை எடுக்கும்படி முதலமைச்சர் உத்தரவிட்டதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைத் தொடர்ந்து, தி.மு.க. நிர்வாகிகள் நான்கு பேர் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். அதேபோல், தாக்குதலில் ஈடுபட்டோரை போலீசார் கைது செய்தனர்.




மேலும் வாசிக்க.. 


A R Rahman on Ilayaraja: அவரிடம் துப்பாக்கி இருக்காது.. ஆனால் எல்லாரும் நடுங்குவார்கள்... இளையராஜாவிடம் பிடித்த விஷயம் இதுதான்.. ஏ.ஆர்.ரஹ்மான் பளிச்


மருத்துவ குணம் நிறைந்த அதலைக்காய்.. நீரிழிவு, கல்லீரல் நோய்க்கு சிறந்த மருந்து.. வேறு என்ன பயன்கள் உள்ளது? முழு விவரம்..