இசையமைப்பாளர் இளையராஜாவிடமிருந்து தான் கற்றுக் கொண்டது என்ன என்பது குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மனம் திறந்துள்ளார்.


சமகால இசை ஜாம்பவான்கள்
 
தமிழ் சினிமாவில் கே.வி. மகாதேவன், எம்.எஸ் விஸ்வநாதன் போன்ற இசை ஜாம்பவான்களுக்குப் பிறகு தமிழ் திரையிசையின் இரு பெரும் தூண்களாகக் கருதப்படுபவர்கள் இளையராஜாவும் ஏ.ஆர்.ரஹ்மானும்.


இவர்களில் இளையராஜாவிடம் பணியாற்றி, அவரை தன் ஆசிரியர்களில் ஒருவராகக் கருதி இசைக் கற்று வளர்ந்து, இன்று அவருக்கு நிகராக கொண்டாடப்படும் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் உருவெடுத்துள்ளார். இளையராஜாவின் இசைக்குழுவில் தன் இசைப் பயணத்தைத் தொடங்கிய ஏ.ஆர்.ரஹ்மான், அவருடன் சுமார் 500 படங்களில் பணியாற்றியுள்ளதாகத் தகவலகள் தெரிவிக்கின்றன. 


இளையராஜாவிடம் கற்றுக்கொண்ட விஷயம்


அதன் பின் 1990களில் இசையமைப்பாளராக அறிமுகமான ஏ.ஆர். ரஹ்மான், இளையராஜாவுக்கு நிகராக நாடு முழுவதும் போற்றப்படும் இசையமைப்பாளராக வளர்ந்து ஆஸ்கர் நாயகனாகவும் உருவெடுத்தார். 


இன்று இளையராஜாவா ஏ.ஆர்.ரஹ்மானா என இணையதளவாசிகள் பெரும்பாலான சமயங்களில் சண்டையிட்டுக் கொண்டாலும், இளையராஜாவும் சரி ஏ.ஆர்.ரஹ்மானும் சரி ஒருவர் மீது ஒருவர் கொண்டிருக்கும் மதிப்பையும் அன்பையும் தொடர்ந்து பொது தளங்களில் வெளிப்படுத்தியே வருகின்றனர்.




அந்த வகையில் இளையராஜாவிடம் தான் கற்றுக்கொண்டது என்ன என்பது குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் மனம் திறந்துள்ளார்.


’சாமியார் மாதிரி இருப்பார்...’


தனியார் ஊடகத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் முன்னதாக அளித்த நேர்காணலின்போது,  “இளையராஜாவிடம் நீங்கள் கற்றுக் கொண்ட விஷயம், வாழ்க்கையில் மிகவும் அது உபயோகமாக இன்று வரை உள்ளது என நீங்கள் நினைப்பது என்ன?” எனக் கேள்வி எழுப்பப்பட்டது. 


இதற்கு பதிலளித்த ஏ.ஆர்.ரஹ்மான், ”ஒரு இசைக் கலைஞன் என்றால் தண்ணியடிப்பான், போதைப் பொருள்கள் எடுத்துக் கொள்வான், பெண்களோடு சுற்றுவான், அவனுக்கு சரியான கேரடர் இருக்காது என ஒரு குறிப்பிட்ட தலைமுறையினர் களங்கம் கற்பித்து ஒரு விஷயத்தினை உருவாக்கிவிட்டனர்.


இசைக் கலைஞன், பாடகர் என்றாலே அந்தப் பக்கம் போகாதே எனும் நிலை உருவாகிவிட்டது. இது மாதிரி சமயத்தில் இளையராஜா சாரிடம் தான் நான் இதனை முதன்முதலில் பார்த்தேன். இந்தக் களங்கத்தை உடைத்து ஒரு சாமியார் போல் அமர்ந்திருப்பார். தண்ணியடிக்க மாட்டார். தம்மடிக்க மாட்டார். வேறு கெட்ட பழக்கம் எதுவும் இருக்காது. இசை மட்டும்தான். அவரது இசைக்காக வந்த மரியாதை. அந்த விஷயம் என்னை இன்னும் பாதித்தது.


’எல்லாரும் நடுங்குவாங்க’


துப்பாக்கியெல்லாம் எதுவும் வைத்திருக்க மாட்டார். ஆனால், அவரைப் பார்த்து அனைவரும் நடுங்குவார்கள். அவரிடமிருந்த இந்த விஷயம் என்னை மிகவும் ஈர்த்தது. அதன் பின் நான் ஒரு இசையமைப்பாளராக வரும்போது, என்னுடைய சொந்த வழியில் அதை சூஃபியிசத்தில் கொண்டு சென்றேன். ஸ்டுடியோவில் அவ்வளவு மரியாதை எனக்கு கிடைத்தது.


நான் யாருக்கு ஃபோன் செய்தாலும் 3 மணி ஆகட்டும் தங்கள் வீட்டு பெண்களை ஸ்டுடியோவுக்கு ரெக்காடிங்குக்கு அனுப்புவார்கள். இதை ஒரு வரப்பிரசாதமாக நினைக்கிறேன். இதை நான் இளையராஜா போன்ற குருக்களிடமிருந்து கற்றேன்” எனத் தெரிவித்துள்ளார்.


“தமிழ் சினிமாவில் இளையராஜாவுக்கு மாற்றாக இயக்குநர் கே.பாலச்சந்தர் அறிமுகப்படுத்திய ஏ.ஆர்.ரஹ்மான், மரகதமணி இருவரும் ஆஸ்கர் வென்று விட்டார்கள்; ஆனால் இளையராஜாவால் பெற முடியவில்லை” என ஒரு தரப்பினர் இணையத்தில் கடந்த சில நாள்களாக கேலி செய்துவரும் நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானின் இந்த நேர்காணல் இவற்றுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.