அதலைக்காய் – இந்த பெயரை பலரும் கேளிவிபட்டிருக்க மாட்டோம். ஆனால் பெரும்பாலான கிராம வாசிகளுக்கு மிகவும் பரீட்சியமான பெயர் தான். பாகற்காய் போலவே அதலைக்காயும் ஒத்தியிருக்கும். அதலைக்காய் என்பது பாகற்காய் போல் கசப்பு தன்மை கொண்டது, மேலும் அளவில் மிகவும் சிறியதாக இருக்கும். கரிசல்காட்டுப்பகுதிகளில் அதிகம் விளையக்கூடியது. அதலைக்காய் மழைக்காலங்களில் செடி போல் படர்ந்து வளரும். ஒரு செடியில் சுமார் 50 காய் வரை பறிக்கலாம். சீசன் தொடங்கியதும் ஒரு கிலோ விலை 100 முதல் 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும்.
அதலைக்காய் – பாகற்காயை விட சற்று கசப்பு அதிகமாக இருக்கும் ஆனால் சுவையும் அதிகமாக இருக்கும். தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் மட்டுமே கிடைக்குக் காய் இது. பச்சை நிறத்தில் இருக்கும் இந்த அதலைக்காயால் ஏற்படும் நன்மைகளோ ஏராளம். அதலைக்காயில் இல்லாத சத்துக்களே கிடையாது. துத்தநாகம், சிங்க், பாஸ்பரஸ், வைட்டமின் சி பேன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. கசப்பு தன்மை அதிகம் இருந்தாலே அது வயிற்றுக்கு நல்லது என கூறுவார்கள். அந்த கசப்பு தன்மை வயிற்றில் இருக்கும் கெட்ட கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது.
மேலும் வயிற்று பிரச்சனைகளை சரி செய்து செரிமானத்தை அதிகரிக்க உதவும். அதலைக்காயும் வயிற்றில் இருக்கும் கெட்ட கிருமிகளை வெளியேற்றவும், குடல் புழுவை நீக்கவும், உடலில் ஹார்மோன் அளவை சீராக வைக்கவும் உதவும் என கூறப்படுகிறது.
இது மட்டுமல்லாமல் நீரிழிவு நோயாளிகளுக்கு இது சிறந்த மருந்தாகும். இந்த காயை உட்கொள்வதால் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க உதவும். பாகற்காய் எப்படி சர்க்கரை அளவை கட்டுபடுத்த உதவுகிறதோ அதலைக்காயும் சர்க்கரை அளவை குறைத்து கட்டுக்குள் வைக்கும். குறைந்த கலோரியும், கிளைசெமிக் குறியீடும் இருப்பதால் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும்.
அதலைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் சூட்டை சமநிலையில் வைத்திருக்க உதவும். கல்லீரல் நோயை குணப்படுத்துவதில் இந்த காய் முக்கிய பங்காற்றுகிறது. ஹெபடைடிஸ், மஞ்சள் காமாலை ஆகிய நோய்களுக்கு அதலைக்காயை வாரத்திற்கு 3 நாட்கள் எடுத்து வந்தால் விரைவில் குணமடையும் என கூறுகின்றனர்.
அதலைக்காய் பறித்தவுடன் சமைத்து விட வேண்டும். ஏனெனில் இந்த காய் சமைக்காமல் விட்டால் அது பயிர் விட்டு வெடிக்கும் தன்மை கொண்டது. குறிப்பிட்ட மாவட்டங்களில் குறிப்பிட்ட சீசனில் மட்டுமே கிடைக்கும் என்பதால் இதனை வத்தல் போட்டு வைத்துக்கொள்ளலாம். அதலைக்காயை பொடியாக நறுக்கி, வெங்காயம் உடன் சேர்த்து வதக்கி பொறியலாக சாப்பிடலாம். இல்லை என்றால் கார குழம்பு வைத்து சாப்பிடலாம். வத்தலை கார குழம்பு தாளிக்கும் போது உடன் சேர்த்து சாப்பிடலாம். அதலைக்காய் கொண்டு சாம்பார் வைக்க முடியாது. அதிக மருத்துவ குணம் நிறைந்திருப்பதால் இதனை அனைவரும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.