தேவையில்லாமல், திராவிட முன்னேற்றக் கழகத்தை வீண் வம்புக்கு இழுக்க வேண்டாம் என திமுக அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி மத்திய அமைச்சர் எல். முருகனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், “பொறுப்புள்ள பதவியில் அமர்ந்துள்ள எல்.முருகன் பொறுப்பற்ற முறையில் செய்திகள் வெளியிடுவது அவருடைய அறியாமையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. ஏற்கனவே கடந்த 80 ஆண்டுகாலத்திற்கும் மேலாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் போர்வாளாக இயங்கி வரும் முரசொலி அறக்கட்டளை கட்டிடம் குறித்து, வேலூரில் இவர் பேசிய அவதூறு பேச்சு குறித்து, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நான் தொடர்ந்த வழக்கில், இவர் வருகிற ஏப்ரல் 22ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டுமென்று, நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
இளையராஜா விவகாரம்
இசைஞானி இளையராஜா பிரதமர் மோடி குறித்து தெரிவித்த கருத்துக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த யாரும் எவ்வித கருத்தும் தெரிவிக்கவும் இல்லை. தெரிவிக்க விரும்பவும் இல்லை. பிரதமர் மோடி குறித்து, இளையராஜா கருத்து சொல்வது எல்.முருகன் வாதத்தின்படி, எப்படி கருத்து சுதந்திரமாகுமோ அதைபோல், இளையராஜா அவர்களின் கருத்து குறித்து விமர்சனம் செய்திட, மற்றவர்களுக்கும் சுதந்திரம் உண்டு என்பதை எல்.முருகன் புரிந்து கொள்ள வேண்டும். தேவையில்லாமல், திராவிட முன்னேற்றக் கழகத்தை வீண் வம்புக்கு இழுக்க வேண்டாம் என்று எல்.முருகனை எச்சரிக்க விரும்புகிறேன்.
ஏற்கனவே, முரசொலி இடம் குறித்து தாங்கள் பேசியது குறித்து, நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும், ஒரு வழக்கினை தங்கள்மீது தொடர வழிவகுக்க வேண்டாம் என்றும், தங்களின் இப்போக்கை திருத்திக் கொள்ளாவிட்டால், திராவிட முன்னேற்றக் கழகம் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கும் என்பதனை எச்சரிக்கையாவும் அறிவுரையாகவும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
என்னதான் பிரச்னை
பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி செயல்பாடுகளை கண்டு அம்பேத்கரே பெருமைபடுவார் என இசைஞானி இளையராஜா எழுதியதாக கூறப்படும் வரிகளுக்கு ஆதரவும், தற்போது கடும் எதிர்ப்பும் கிளப்பி வந்தது. மேலும், ஒரு சிலர் இளையராஜா மத்திய அரசு வழங்கும் எம்பி பதவிக்கு ஆசைப்பட்டுதான் அம்பேத்கரையும், மோடியையும் ஒன்றாக இணைத்து பேசினார் என்று கருத்து தெரிவித்து வந்தனர்.
தொடர்ந்து, இதுகுறித்து பேசிய இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன், அம்பேத்கருடன் மோடியை ஒப்பிட்டு பேசிய கருத்துக்கு மன்னிப்பு கேட்கமுடியாது என இளையராஜா கூறினார். தனக்கு எதிரான விமர்சனங்களை ஏற்றுக்கொள்வதாகவும் என்னிடம் இளையராஜா கூறினார். தான் பதவி வாங்குவதற்காக மோடியை புகழவில்லை. தான் கட்சிக்காரர் இல்லை என்றும் கூறினார்.
அம்பேத்கரையும் பிடிக்கும், மோடியையும் பிடிக்கும். அதனால் ஒப்பிட்டு பேசினேன் என்று இளையராஜா கூறினார்” என்று தெரிவித்தார். இதனிடையே, இளையராஜாவின் மகனான யுவன் ஷங்கர் ராஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு திராவிடன், தமிழனாக இருப்பதில் பெருமை” என்று பதிவிட்டார். இதற்கு எதிர்வினையாற்றிய, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை “யுவன் சங்கர் ராஜாவை விட கருப்பு நான். நானும் கருப்பு திராவிடன் தான். எனக்கு சத்தியமாக இந்தி தெரியாது. அவர் கருப்பு தான், ஆனால் நான் அண்டங்காக்கை கருப்பு” என்றார்.