தமிழ்நாட்டில் காவல்துறை முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இல்லை. ஆதலால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
நில அபகரிப்பு வழக்கு தொடர்பாக நிபந்தனை ஜாமீன் பெற்றுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் அமைந்துள்ள மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்தில் கையெழுத்திட்டார்.
பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது:
தமிழகத்தில் செயின் பறிப்பு, கொலை கொள்ளை, ஆள்கடத்தல், கூட்டுப் பாலியல் பலாத்காரங்கள் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து காவல் துறையே தகவல் வெளியிட்டுள்ளதன் மூலம் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என்பது நிதர்சனமாகத் தெரிகிறது. மக்களின் சகஜ வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மறைந்த முதலமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் ஆட்சிக்காலத்தில் காவல்துறையினர் சுதந்திரமாக கடமையை செயலாற்றும் நிலை இருந்தது. அந்தக் காலத்தில் மக்கள் நிம்மதியான அமைதியான வாழ்க்கையை வாழ்ந்தனர். ஆனால் இன்று ஆட்சி என்ற ஒன்று இருக்கிறதா என சந்தேகம் எழுந்துள்ளது.
சென்னையில் கவுன்சிலர்களின் அட்டகாசங்கள் எல்லை மீறி விட்டது. இன்று யாரும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இல்லை. அந்தவகையில் காவல்துறை இன்று பரிதாப நிலையில் இருக்கிறது. காவல்துறையில் உள்ள ஒருசில கருப்பு ஆடுகளை களை எடுக்கும் நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட வேண்டும். ஆனால், இந்த அரசால் அதை செய்ய முடியாது. முதலமைச்சர் கட்டுப்பாட்டில் தமிழ்நாடும், காவல் துறையும் இல்லை. அதனால், சட்ட ஒழுங்கு சீர் கெட்டுள்ளது. அதிமுகவினரை பழிவாங்க வேண்டும்; வழக்கு போட வேண்டும்; சிறையில் அடைக்க வேண்டும் போன்றவற்றில்தான் முதலமைச்சரின் எண்ணம் இருக்கிறது.
காவல்துறையினர் மீது கல்லெறிந்த சமூக விரோதியை பிடித்து கொடுத்த என் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. ஆனால், அவர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்படி இருந்தால் திமுகவினர், திமுக கவுன்சிலர்கள் எப்படி பயப்படுவார்கள்? சட்ட ஒழுங்கு சீரழிவு குறித்து முதலமைச்சர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மு.க.ஸ்டாலினுக்கு இது குறித்தெல்லாம் கவலை இல்லை. தினமும் எங்காவது செல்ல வேண்டியது; ரிமோட் எடுக்க வேண்டியது; திறக்க வேண்டியது; போஸ் கொடுக்க வேண்டியது; ரிப்பீட்டு! என்று மாநாடு பட பாணியில் விமர்சனம் செய்தார்.
இளையராஜா விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், அரசியல் அமைப்புச் சட்டத்திலேயே கருத்து சுதந்திரம் இருக்கிறது. கருத்து தெரிவிப்பது சுதந்திரம். ஒரு கருத்திற்கு எதிர்கருத்து தெரிவிக்கலாம். ஆனால் அதை குற்றம் சாட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது .
இளையராஜா தன் கருத்தை தெரிவித்திருக்கிறார். ஆனால் அது குறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.
எந்தக் கலவரமும் இல்லாமல் இந்து,இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்கள் ஒன்றுபட்டு சகோதரத்துவத்துடன் வாழும் மாநிலம் தமிழ்நாடு. அப்படி ஒரு மாநிலமாக தமிழ்நாட்டை இரும்பு கரம் கொண்டு மாற்றி காட்டி அமைதியை நிலை நாட்டியவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா. ஆனால் தற்போதைய முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அதை செய்து காட்டுவாரா என்கின்ற நம்பிக்கை இல்லை. தற்போதைய ஆட்சியாளர்களுக்கு அந்த திறமையும் இல்லை” என்று தெரிவித்தார்.
’டிடிவி தினகரன் ஒரு சுயநலவாதி. இரட்டை இலை ஒரு மேஜிக் சிம்பிள். அதை, தான் வாங்கிவிட்டால், அதிமுகவில் தாம் எல்லாம் என்கிற நப்பாசையில் செயல்பட்டார். அதில் அவர் இன்று மாட்டிக்கொண்டார். தற்போது அந்த வழக்கு விசாரணைக்காக ஆஜராகி வருவதாக” என்று விமர்சித்தார்.
மீனவர் பிரச்ச்சினை குறித்து பேசுகையில், “தமிழ்நாடு மீனவர் விவகாரத்தில் மத்திய அரசுக்கு உணர்வு பூர்வமாக அழுத்தம் கொடுக்க வேண்டும் என்கின்ற எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை, மத்திய அரசுக்கு கடிதம் மட்டும் எழுதும் போஸ்ட் மேன் வேலை மட்டும்தான் திமுக செய்து வருகிறது.” என்று தெரிவித்தார்.