கரூர் மாவட்டம், குளித்தலை அருகே அய்யர்மலையில் மலை உச்சியில் சுரும்பார் குழலி உடனுறை ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 1178 அடி உயரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற இந்த சிவஸ்தலம் ஆனது 1017 படிக்கட்டுகளை கொண்டுள்ளது. இத்திருக்கோவிலில் கடந்த 2011-ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில் ரோப்கார் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது.




பின்னர் வந்த அதிமுக ஆட்சியில், கடந்த 2017 ஆம் ஆண்டு மீண்டும் ரோப் கார் பணிகள் அமைப்பதற்கான வேலைகள் நடைபெற துவங்கியது. இடையில் கொரோனா ஊரடங்கு காரணமாக தொய்வான பணிகள் மீண்டும் துவங்கி மந்தமாக நடைபெற்று முழுமை பெறாத நிலையில்,  கடந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு என்று அவசர அவசரமாக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. 



பின்னர் திமுக அரசு ஆட்சிக்கு வந்ததும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கடந்த ஜூன் மாதம் அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயிலில் ஆய்வு மேற்கொண்டு ரோப் கார் பணிகளை 9 மாத காலத்திற்குள் பணிகள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்திருந்தார். தற்போது கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரில் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு  அய்யர்மலை திருக்கோவிலில் சில நாட்களில் சோதனை ஓட்டம் நடைபெற்று பின்னர் பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என தெரிவித்திருந்தார்.




அதன்படி கூடுதல் நிதிகள் ஒதுக்கப்பட்டு மொத்தமாக ரூ. 6.17 கோடி மதிப்பில் தற்போது பணிகள் நிறைவடைந்ததை அடுத்து இன்று ரோப் கார் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இந்த ரோப் கார் சோதனை ஓட்டத்தில் குளித்தலை திமுக எம்எல்ஏ மாணிக்கம் துவக்கிவைத்தார். பின்னர் அங்கிருந்த பக்தர்கள்  அனைவருக்கும் இனிப்புகளை வழங்கி மகிழ்ந்தனர். சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு  ஏராளமான பக்தர்கள்  வந்து மலையேறி சுவாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் ரோப்கார் சோதனை ஓட்டம் நடைபெற்றதை பார்த்து பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்யவும் https://bit.ly/2TMX27X


பொதுமக்களின் பல ஆண்டுகால கோரிக்கையை ஏற்று முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டு, தற்போது முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் ஆட்சிக்காலத்தில் குளித்தலை அய்யர்மலை பகுதியிலுள்ள அருள்மிகு சுரும்பார் குழலி உடனுறை ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் திருக்கோவில் ரோப் கார் சோதனை செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியை கண்டுகளித்த மக்கள், இந்த ஆலயத்தின் பக்தர்கள், தமிழக அரசுக்கும், தமிழக மின்சாரத்துறை அமைச்சருக்கும், சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தனர்