ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. 1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, இந்திய நாட்டிற்கென தனி அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டு அது நடைமுறைக்கு வந்த நாள் 1950ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி. அந்த நாளே குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது.


இந்தியாவின் 74ஆவது குடியரசு தினம் நாடு முழுவதும் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில் குடியரசு தின விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அந்த விழாவை திமுக மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம். அப்துல்லா புறக்கணித்ததாக தகவல் வெளியானது.


விழாவில் தனக்கு முறையான இருக்கை ஒதுக்கப்படவில்லை என குற்றம்சாட்டி விழாவை புறக்கணித்ததாக கூறப்பட்டது. தனக்கு இருக்கை முறையாக ஒதுக்கப்படவில்லை என்று கூறி கொடியேற்றும் முன்பே எம்பி அப்துல்லா கிளம்பி சென்றதாக குற்றம்சாட்டப்பட்டது.


இதுதொடர்பாக திமுக எம்பி அப்துல்லாவை தொடர்புகொண்டு கேட்டபோது, தனக்கு இடுப்பு எலும்பில் பிரச்சனை இருப்பதாகவும் இரண்டு மாதமா கையில் ஊன்று கோலுடன் நடந்து வருவதாக விளக்கம் அளித்தார்.


மேலும், அதிக நேரம் உயரம் குறைந்த ஷோபாவில் அமர முடியாது. இருப்பினும், குடியரசு விழா என்பதால் அழைத்த மரியாதைக்கு வந்துவிட்டு கிளம்பியதாகவும் கூறினார்.


இருந்தபோதிலும், அப்துல்லா மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வந்தது. குறிப்பாக, பாஜக மாநில தகவல் தொடர்பு மற்றும் சமூக வலைதள பிரிவு தலைவர் சிடிஆர் நிர்மல் குமார் காட்டமான விமர்சனத்தை முன்வைத்திருந்தார்.


புதுக்கோட்டை ஆட்சியர் வசதியான நாற்காலி போடாததால் கோபித்துக் கொண்டு குடியரசு தின விழாவை MP அப்துல்லா புறக்கணித்து கிளம்பியதாக அவர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.


இதற்கு ட்விட்டர் வாயிலாகவே பதிலளித்த அப்துல்லா, "கண்ணு தெரியலையாப்பா??? கையில ஊன்று கோல் இருப்பது தெரியலையா?? a vascular necrosis ஆல் அதிக நேரம் அமர முடியாது.






எனவே உடல்நலக் குறைவிலும் மரியாதை நிமித்தமாக வந்து தகவல் சொல்லிவிட்டு கிளம்பினேன். உடல் நலக் குறைவு என்பது யாருக்கும் வரும்.. நாளை உனக்கும் வரும் உணர்க" என குறிப்பிட்டுள்ளார்.


மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த குடியரசு தின விழாவில் திமுக எம்பி புறக்கணித்ததாக வெளியான செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.