Palani Kumbabishekam: ஓங்கி ஒலித்த ‘அரோகரா’ கோஷம்... பழனி முருகன் கோயிலில் வெகுவிமரிசையாக நடந்த கும்பாபிஷேகம்!

Palani Kumbabishekam 2023:கும்பாபிஷேக  விழாவுக்கான பூஜைகள் கடந்த ஜனவரி 18 ஆம் தேதி தொடங்கிய நிலையில் ஜனவரி 23 ஆம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது

Continues below advertisement

பழனி தண்டாயுதபாணி கோயிலில் 16 ஆண்டுகளுக்குப் பின் வெகுவிமரிசையாக கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். 

Continues below advertisement

முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி உலகப் புகழ் பெற்றது. இங்கு தண்டாயுதபாணியாக  வீற்றிருக்கும் முருகனை காண தினந்தோறும் ஆயிரக்கணக்கான  உள்ளூர், வெளியூர்  பக்தர்கள் வருகை தருவதால் ஆண்டு முழுவதும் பழநி விழாக்கோலம் பூண்டிருப்பது வழக்கம். இதனிடையே 16 ஆண்டுகளுக்குப் பின் இன்று பழனியில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. 

விழாக்கோலம் பூண்ட பழனி 

கும்பாபிஷேக  விழாவுக்கான பூஜைகள் கடந்த ஜனவரி 18 ஆம் தேதி தொடங்கிய நிலையில் ஜனவரி 23 ஆம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. மேலும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மலைக்கோவில் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களை கவர்ந்தது. முன்னதாக கும்பாபிஷேக  விழாவை காண முன்பதிவு செய்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களில் 6 ஆயிரம் பேருக்கு மட்டுமே மலைக்கோயிலில் காண அனுமதி வழங்கப்பட்டு மேலே அனுமதிக்கப்பட்டனர்.

16 ஆண்டுகளுக்குப் பின் கும்பாபிஷேகம்

மேலும் பக்தர்கள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு  பழனி நகரம் முழுவதும் 300 சிசிடிவி கேமரா மூலம் காவல்துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. 100க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள், ஓதுவார்கள் திருமுறை, திருப்புகழ் பாட,   காலை 8 மணிக்கு கோயிலின் ராஜகோபுரம், தங்க விமானம் ஆகியவற்றிற்கு சென்ற சிவாச்சாரியார்கள் தமிழில் வேதமந்திரம் முழங்கி பூஜை செய்தனர். பின்னர் கங்கை, காவிரி, சண்முக நதியில் இருந்து சேகரிக்கப்பட்ட புனித நீரை ஊற்றி இனிதே கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர் பாபு உள்ளிட்ட அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நீதிபதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அதிகாரிகள், ஆதீன மடாதிபதிகள் என பலரும் பங்கேற்றனர். கலசங்களுக்கு புனித நீர் ஊற்றிய போது விமானம் மூலம் கோபுரம் மீது மலர் தூவப்பட்டது. அதேபோல் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்க 8 இடங்களில் கருவிகளும் வைக்கப்பட்டுள்ளது. பிற இடங்களில்  கும்பாபிஷேகம் விழாவை காண வசதியாக மலை அடிவாரம் தொடங்கி பேருந்து நிலையம் வரை 16 இடங்களில் பெரிய எல்.இ.டி திரைகள் வைக்கப்பட்டது.இதன் மூலம் லட்சக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேகத்தை கண்டு களித்தனர். 

காவல்துறையினர் கண்காணிப்பு 

கும்பாபிஷேகம் முடிந்த பின்னர் காலை 11 மணி முதல் வழக்கம்போல பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  பக்தர்கள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு பழனி நகரம் முழுவதும் 300 சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்படுவதோடு ஹெலிகேம் மூலம் காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர். மேலும் 2500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  

அதேசமயம் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பழனி பேருந்து நிலையத்திற்கு புறநகர் பேருந்துகள் வரை தடை செய்யப்பட்டுள்ளது.  பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தரும் பக்தர்களுக்கு வசதியாக அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து 30க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் பழனிக்குள் இயக்கப்படுகிறது. 

பக்தர்கள் வாகனம் நிறுத்த ஏற்பாடு 

ஒட்டன்சத்திரத்தில் இருந்து கார்களில் பழனி வரக்கூடிய பக்தர்களுக்கு கொடைக்கானல் பைபாஸ் பிரிவு, கோவில் சுற்றுலா பஸ்நிலையம் ஆகிய இடங்களில் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  கோவை பகுதியில் இருந்து பழனி வரும் கார்கள், சண்முகநதி பைபாஸ், பாலசமுத்திரம் சந்திப்பு வழியே கோசாலை பார்க்கிங் மற்றும் கார்த்தி பள்ளி வளாகத்தில் வாகன நிறுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Continues below advertisement