சென்னை அண்ணாசாலையில் கட்டிட சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் நடைபாதையில் சென்று கொண்டிருந்த பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


சென்னையில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் அண்ணாசாலையின் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள மசூதி அருகே பழமையான கட்டிடம் ஒன்று கடந்த சில நாட்களாக இடிக்கப்பட்டு வருகிறது. இன்றும் இடிக்கும் பணி தொடர்ந்த நிலையில்,
ஜேசிபி இயந்திரம் கொண்டு இடிக்கும் பணி நடைபெற்றுள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக கட்டிடத்தின் சுவர் வெளிப்புறமாக சாலையில் விழுந்துள்ளது. இதனால் சாலையில் சென்று கொண்டிருந்த இரு பெண்கள் இடிபாடுகளில் சிக்கினர். 


கணநேரத்தில் நடந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக  ஆயிரம் விளக்கு பகுதி காவல்துறையினருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வருவதற்குள் இடிபாடுகளுக்குள் சிக்கிய இருவரையும் மீட்கும் பணி தொடர்ந்தது. சுமார் 20 நிமிட முயற்சிகளுக்குப் பின் பொதுமக்கள் உதவியுடன் தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் அப்பெண்களை மீட்டனர்






இருவரும் ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அதில் ஒரு பெண் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மற்றொரு பெண்ணுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக சென்னை ஆயிரம் விளக்கு போலீசார் மேற்கொண்ட விசாரணையில், உயிரிழந்த பெண்ணின் பெயர் பிரியா என்பதும், அவர் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என தெரிய வந்தது. 


சென்னை பம்மலில் தனது சித்தி வீட்டில் இருந்து ஆயிரம் விளக்கில் அமைந்துள்ள அலுவலகம் ஒன்றில் பணி புரிந்து வந்துள்ளார். இன்று காலை வழக்கம்போல பணிக்கு வந்த போது தான் விபத்து ஏற்பட்டுள்ளது. அதேசமயம் இடிந்து விழுந்த கட்டிடம் எந்த முன்னறிவிப்பு பலகையும் வைக்கப்படாமல், பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் ஒன்று இடிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் எப்போதும் வாகன நெரிசலால் திணறும் சென்னை நகரின் முக்கிய பகுதியில் நடந்த இந்த விபத்தில் இளம்பெண் பலியான சம்பவம் பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் இந்த விபத்தால் சென்னை அண்ணாசாலையில் எந்த பக்கமும் செல்ல முடியாத அளவுக்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கிட்டதட்ட 1 மணி நேரம் சாலையில் வாகனங்கள் நகராமல் நின்றதால் பணிக்கு செல்வோர், பள்ளி, கல்லூரி செல்வோர் கடும் அவதியடைந்தனர்.