2026ஆம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு திமுகவுக்கு நிரந்தர வனவாசம் தான் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதற்கு திமுக எம்.பி கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார்.
முன்னதாக, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “திமுக ஆட்சியில் நொடிக்கு நொடி கொலை என்றாகிவிட்டது. சட்ட ஒழுங்கு அந்த அளவுக்கு மோசமாகிவிட்டது. வாழ்வதற்கு பாதுகாப்பு இல்லை. போலிஸின் கைகள் கட்டப்பட்டிருக்கு. அதுதான் முழு முதற் காரணம். சுதந்திரமாக செயல்படவிடுவதில்லை. ஸ்டாலின் போகும் வழியில் ஆயிரம் போலீஸ். உதயநிதி போகும் வழியில் ஆயிரம் போலீஸ் என்றால் எந்த போலீஸ் போய் திருடர்களை பிடிப்பார்கள். 2026ஆம் ஆண்டு தேர்தலில் கண்டிப்பாக அதிமுகதான் வரும். 2026 தேர்தலுக்கு பிறகு திமுகவுக்கு நிரந்தர வனவாசம்தான்” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் இதுகுறித்து திமுக எம்.பி கனிமொழியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அதிமுகவுக்கு எந்த வேலையும் இல்லாததால் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எல்லாருக்கும் ஆறுதல் சொல்ல தொடங்கிவிட்டார். பகுதி நேர வேலையா இதை பார்த்துக்கொண்டு இருக்கிறார். வேலையில்லை அவருக்கு. பயத்திலிருந்து வரக்கூடிய கருத்துக்கள்தான் அது” எனத் தெரிவித்தார்.
மேலும், மணிப்பூர் கலவரம் பாஜக ஆட்சியில் உலகத்தின் முன்னால் தலைகுனியக்கூடிய பிரச்சியாகத்தான் உள்ளது. இந்த நாட்டின் பிரதமர் ஒருமுறை கூட அந்த பகுதிக்கு செல்லவில்லை. பிரதமர் மோடி மணிப்பூருக்கு செல்லாமலும், ஆறுதல் தெரிவிக்காமலும், பிரச்சினைகள் குறித்து ஆராயாமலும் இருப்பது கண்டனத்திற்குரியது. நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நாட்டின் முக்கிய பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்ப வேண்டியது எதிர்க்கட்சிகளின் கடமை. என்னென்ன பிரச்சினைகள் அங்கு எழுப்பப்படும் என்பது குறித்து முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி, மற்ற கட்சிகளின் கோரிக்கைகளையும் கேட்டு முடிவெடுக்கப்படும்.” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “தென் மாவட்டங்களில் தொடர்ந்து மழை நீர் வடிகால் வேலை நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஏரிகளை தூர்வாரி ஆழப்படுத்தி இருக்கிறோம். தேவையான நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டுதான் இருக்கிறோம்.” எனத் தெரிவித்தார்.