சனாதன தர்மத்திற்கு எதிராக இந்தியாவில் தமிழ்நாடு என்ற ஒரு மாநிலம் செயல்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்ததற்கு திமுக எம்.பி., ராணி ஸ்ரீ குமார் பதிலடி கொடுத்துள்ளார். 

Continues below advertisement

டெல்லி வரை எதிரொலித்த திருப்பரங்குன்றம் விவகாரம் 

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் முருகன் கோயில் பின்புறம் உள்ள மலை மீது உச்சியின் ஒருபுறம் காசி விஸ்வநாதர் ஆலயமும், மறுபுறம் இஸ்லாமிய தர்காவும் இருந்து வருகிறது. இப்படியான நிலையில் மலை உச்சியில் தர்காவுக்கு தீபத்தூண் அமைந்திருப்பதாக சொல்லப்படும் இடத்தில் திருக்கார்த்திகை அன்று தீபம் ஏற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

இதனை விசாரித்த தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதன் அனுமதி அளித்த நிலையில் மத நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு விடலாம் என கருதி தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்கப்படவில்லை. இரண்டு முறை உத்தரவிட்டும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தும் தமிழ்நாடு அரசு அனுமதியளிக்கவில்லை. இதுதொடர்பான வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடந்து வருகிறது. அதேசமயம் இந்த விவகாரம் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரிலும் எதிரொலித்தது. 

Continues below advertisement

தமிழ்நாட்டை சாட்டிய அமைச்சர் அனுராக் தாக்கூர் 

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து இந்தியா கூட்டணி சார்பில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை மாற்ற வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த சம்பவம் மக்களவையில் விவாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் திமுக - பாஜக எம்.பி.,க்கள் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்று வருகிறது. 

அந்த வகையில் மத்திய பாஜக அமைச்சர் அனுராக் தாகூர் நேற்று (டிசம்பர் 12) மக்களவையில் உரையாற்றினார். அப்போது திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து பேசும்போது திமுக அரசை கடுமையாக சாடினார். அதாவது, “இந்தியாவில் ஒரு மாநில அரசு சனாதன தர்மத்திற்கு எதிராக செயல்படுகிறது. நீதிமன்றம் அனுமதி கொடுத்தும் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதிக்காமல் ஏன் தடுக்கிறார்கள்?. அன்று நீதிமன்றம் ஏறி அயோத்தி ராமர் கோயிலுக்காக நீதி கேட்டோம். இன்று திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற மக்கள் நீதிமன்றம் செல்ல வேண்டிய நிலை உள்ளது” என கூறினார். 

பதிலடி கொடுத்த திமுக எம்.பி., 

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தென்காசி தொகுதி திமுக எம்.பி.,யான ராணி ஸ்ரீகுமார், “எங்களுடைய திமுக அரசு மக்கள் அமைதியாக மற்றும் சுதந்திரமாக வழிபாட்டு முறையை பின்பற்ற பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளது. தமிழ் கடவுளான முருகனை எப்படி வழிபட வேண்டும் என்று தமிழ் மக்களாகிய எங்களுக்கு யாரும் கற்றுத்தர வேண்டாம். அனைத்து சமூக மக்களும் தமிழ்நாட்டில் ஒற்றுமையாக இருந்து வருகின்றனர். சில மதவாத சக்திகள் பொய் தகவல்களை பரப்பி அமைதி பூங்காவான தமிழ்நாட்டில் கலவரம் செய்ய முயற்சிக்கிறார்கள். அதனை தமிழக மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். எனவே மதவாத சக்திகளை எதிர்த்து தமிழ்நாடு போராடும், அதில் வெல்லும்” என தெரிவித்துள்ளார்.