10% இட ஒதுக்கீடு வழக்கில் 5 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் பா.ஜ.க தலைவர் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்:
“பொருளாதார ரீதியாக பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர்களுக்கான இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் இன்று வெளியாகியுள்ள தீர்ப்பு சமூகநீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு”
“சமூகநீதிக்கான குரல் நாடெங்கும் ஓங்கி ஒலித்திடச் செய்ய ஒத்த கருத்துடைய அமைப்புகள் ஒருங்கிணைய வேண்டும்”.
பொருளாதார ரீதியாக பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதற்காக 2019-ஆம் ஆண்டு ஒன்றிய பா.ஜ.க. அரசு கொண்டு வந்த இடஒதுக்கீட்டு முறை சமூகநீதிக்கும், சமத்துவத்திற்கும் எதிராக அமையும் என்ற அடிப்படையில், இதற்கு எதிரான சட்டப் போராட்டத்தை திராவிட முன்னேற்றக் கழகம் முன்னெடுத்து நடத்தி வந்தது. இந்த வழக்கில் இன்று வெளியாகியுள்ள தீர்ப்பு சமூகநீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு என்றே கருத வேண்டியுள்ளது.
எனினும், தீர்ப்பினை முழுமையாக ஆராய்ந்து சட்ட வல்லுநர்களோடு கலந்தாலோசித்து, சமூகநீதிக்கு எதிரானதான முன்னேறிய வகுப்பினருக்கான இந்த இடஒதுக்கீட்டு முறைக்கு எதிரான நமது போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும்.
சமூகநீதியைக் காக்க முதல் அரசியல் சட்டத் திருத்தத்தை மேற்கொள்ள வைத்த தமிழக மண்ணிலிருந்து, சமூகநீதிக்கான குரல் நாடெங்கும் ஓங்கி ஒலித்திடச் செய்ய ஒத்த கருத்துடைய அமைப்புகள் ஒருங்கிணைய வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்” என முதலமைச்சர் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
அதேசமயம் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை 10% இட ஒதுக்கீடு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை வரவேற்றுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசுகையில் "கடந்த காலத்தில் சட்டநாதன் ஆணையம் மற்றும் மதமாற்ற தடைச்சட்டத்திற்கு எதிராக செய்தது போல் மீண்டும் திமுக விசமத்தனமான பிரசாரத்தை செய்து வருகிறது. ஓபிசி , பிசி , எம்பிசி , பட்டியலின இட ஒதுக்கீடு இதன் மூலம் பாதிக்கப்படாது. இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த திமுக நடவடிக்கையை எடுக்க வேண்டும். மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து வரும் காலத்தில் பேசலாம். இன்று இந்த தீர்ப்பை வரவேற்கிறோம்” என கூறினார்.
நாடே எதிர்பார்த்த இந்த வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கிய நிலையில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆதேபோல் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், திமுக எம்.பி-யும் வழக்கறிஞருமான வில்சன் "ஒடுக்கப்பட்ட கீழ்தட்டு மக்களுக்காக கொண்டுவரப்பட்ட திட்டம்தான் இட ஒதுக்கீடு. இது வறுமை ஒழிப்புக்கான திட்டம் இல்லை. பொருளாதாரத்தை அடிப்படையாக வைத்து கொடுக்க முடியாது. ஏனென்றால் இந்திரா-சஹானி வழக்கில் பொருளாதாரத்தை அடிப்படையாக வைத்து இட ஒதுக்கீடு கொடுக்க கூடாது என கூறப்பட்டுள்ளது என்றார். மேலும் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, மறு ஆய்வு மனுதாக்கல் செய்வது குறித்து, திமுக தலைவர் ஸ்டாலின் முடிவு எடுப்பார்" என வில்சன் தெரிவித்தார்.