2011ம் ஆண்டில் 13500 மக்கள் நலப்பணியாளர்களை பணியிலிருந்து நீக்கி ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு உத்தரவை பிறப்பித்தது. இந்த வழக்கை எதிர்த்து மக்கள் நல பணியாளர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் அவர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்ற உத்தரவு வந்தது. அதை எதிர்த்து அதிமுக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உத்தரவிற்கு தடை பெற்றது. 


இந்நிலையில் இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான பொது விவாதத்தின் போது மக்கள் நலப் பணியாளர்கள் தொடர்பாக பேசப்பட்டது. அப்போது குறுக்கிட்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “மக்கள் நல பணியாளர்களை நியமித்தது திமுக அரசு. ஆனால் அதன்பின்னர் வந்த அதிமுக அரசு அவர்கள் அனைவரையும் வீட்டிற்கு அனுப்பியது. அவர்கள் நீதிமன்றம் சென்று மீண்டும் வேலை தரவேண்டும் என்ற உத்தரவை பெற்ற போது அதை எதிர்த்து அதிமுக அரசு உச்சநீதிமன்றம் சென்று தடை பெற்றது. இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வந்த பிறகு மக்கள் நல பணியாளர்கள் அனைவருக்கும் பணி வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் இந்த அறிவிப்பு மக்கள் நல பணியாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. 


 


கடந்த 1989-ஆம் ஆண்டு கருணாநிதி ஆட்சிக்காலத்தில், வேலையில்லாமல் இருந்த 13,000 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது. இவர்கள் அனைவருக்கும், மக்கள் நலப் பணியாளர்களாக 2-7-1990 அன்று நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அதன்பின் 1991ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி அமைந்தபோது, இந்த 13,000 மக்கள் நலப் பணியாளர்களும் பணி நீக்கம் செய்யப்பட்டனர். பிறகு 1996-ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்தபோது, அந்த 13,000 மக்கள் நலப் பணியாளர்களுக்கும் மீண்டும் வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டது. பின்னர் 2001ஆம் ஆண்டு, மீண்டும் ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சி அமைந்த போது, மறுபடியும் மக்கள் நலப் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.இதைத்தொடர்ந்து 2006ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் கலைஞர் 31-5-2006 அன்று மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை தந்தார். பிறகு மீண்டும் 2011ஆம் ஆண்டு 13500 மக்கள் நலப்பணியாளர்களை பணியிலிருந்து நீக்கி ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு உத்தரவை பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண