திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட ஜோதி மலர் சந்தையில் நகராட்சிக்கு சொந்தமாக 144 கடைகள் இயங்கி வருகிறது. மாவட்டம் முழுவதும் உள்ள மலர் சாகுபடி செய்யும் விவசாயிகளும், மலர் வியாபாரிகளும் மொத்தமாகவும், சில்லறையாகவும் மலர்களை விற்பனை செய்து வருகின்றனர். மேலும் இந்த மலர் சந்தைக்கு விற்பனைக்கு வரும் மலர்கள் பெங்களூர், சென்னை விழுப்புரம், வேலூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் வேன் மற்றும் பேருந்துகள் மூலமாக அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த நிலையில் இங்குள்ள கடைகளுக்கு குறைந்தபட்சமாக 8ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சமாக 13ஆயிரம் ரூபாய் வரை நகராட்சி சார்பில் மாத வாடகையாக வசூலிக்கப்படுகிறது. 


 



கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா தொற்று பரவத் தொடங்கிய காலம் முதல் வியாபாரிகள் முறையாக கடைக்கான வாடகையை மாநகராட்சிக்கு செலுத்தவில்லை என கூறப்படுகிறது. மேலும் இத்தொகையை வசூலிக்க வேண்டிய நகராட்சி அதிகாரிகளும் தொடந்து பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். இதனால் நகராட்சிக்கு வரவேண்டிய வருவாய் தடைப்பட்டது. நகராட்சி நிர்வாகத்திற்கு போதிய வருவாய் இல்லாத காரணத்தால், வாடகை பாக்கிகளை உடனடியாக வசூலிக்க நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து வருவாய் ஆய்வாளர் மற்றும் ஊழியர்கள் ஜோதி மலர் சந்தைக்கு சென்று அங்கு கடை வைத்து இருக்கும் மலர் வியாபாரிகளிடம் வாடகை பாக்கிகளை உடனடியாக செலுத்தவும், தவறும்பட்சத்தில் கடைக்கும் சீக் வைக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த வியாபாரிகள், நகராட்சி அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி மலர் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.  



இந்த சம்பவம் தொடர்பாக நகராட்சி ஆணையர் பார்த்தசாரதியிடம் கேட்டபோது:- ஜோதி மலர் சந்தையில் மட்டும் நகராட்சிக்கு சொந்தமாக 144 கடைகள் இயங்கி வருகிறது. இந்த கடைகளுக்கு மட்டும் ரூபாய் 2.5 கோடி ரூபாய் வாடகை பாக்கி உள்ளது. தற்போது நகராட்சி நிர்வாகம் பல இன்னல்களில் இயங்கி வருகிறது. திருவண்ணாமலை நகராட்சியில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான கடைகளில் வரி, வாடகை வசூல் மூலமாகவே நகராட்சி நிர்வாகம் இயங்கி வருகிறது. இந்த கடைகளில் ஒன்று முதல் இரண்டு லட்சம் ரூபாய் வரை வாடகை பாக்கி உள்ளது. இந்த தொகையில் 50 சதவீதம் மட்டுமே செலுத்தும்படியும் அதுவும் இந்த மாதம் 31 ஆம் தேதி வரை காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. இதனை தவறும் பட்சத்தில் ஏப்ரல் மாதம் வாடகை கட்டாத கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என தெரிவித்தார்.