முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக தமிழ்நாட்டை மாற்றி, மாநில வளர்ச்சிக்கும் தமிழக இளைஞர்களின் எதிர்காலத்துக்கும் துணைநிற்கும் திமுக அரசின் செயல்பாடுகள்தான் ‘திராவிட மாடல்’ ஆகும். திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு மேற்கொள்ளப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களே, வளர்ச்சிக்கான அடித்தளம் என்பதே, தொழில் முதலீடுகளை ஈர்ப்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்த கருத்து ஆகும்.


முதலீட்டை ஈர்க்கும் தமிழக அரசு:


கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி நாட்டையே உலுக்கிக் கொண்டிருந்த சூழலில் தான், சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று, முதல்முறையாக தமிழக முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் கடந்த ஆண்டு பொறுப்பேற்றார். ஆட்சி பொறுப்பேற்றதும் முதல்பணியாக அரசு இயந்திரம் முழுமையாக கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் செயல்பட்டது. அரசின் பல்வேறு கட்ட தீவிர முயற்சிகள், தொற்றை கட்டுப்படுத்துவதில் நல்ல பலனை அளித்தது என்றே கூற வேண்டும். அதைதொடர்ந்து, தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிப்பதில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு அதிக கவனம் செலுத்த தொடங்கியது.


முதலீட்டாளர் மாநாடு:


அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக,  இந்தியாவில் அதிக முதலீடுகள் குவியும் மாநிலத்தில் ஒன்றாக தமிழ்நாடு உருவெடுத்தது. அதன்படி, திமுக அரசு பொறுப்பேற்ற முதல்  14 மாதங்களில் மட்டும் தமிழகத்துக்கு ரூ.2 லட்சம் கோடிக்கும் அதிகமாக முதலீடுகள் கிடைத்துள்ளன. கடந்தாண்டு ஜுலை மாதம் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாடு இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த மாநாட்டில் கையெழுத்தான 60 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம், ரூ.1,25,244 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டன.


2021ல் கூடுதல் ஒப்பந்தங்கள்:


அதே ஆண்டு செப்டம்பர் மாதத்தில்  டிபி.வேர்டு உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் உடன் கையெழுத்தான 15 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம், ரூ.3,884.5 கோடி முதலீடுகளை ஈர்த்து 43 ஆயிரத்து 150 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதைதொடர்ந்து, நவம்பர் 22-ம் தேதி கையெழுத்தான 59 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம், 76,795 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் ரூ.35,208 கோடி மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டன.


15,703 வேலைவாய்ப்புகள்:


கடந்த  மார்ச் 7-ம் தேதி 14 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு ரூ.4,488 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு 15,103 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதே மாதம் சாம்சங் நிறுவனத்துடன் கையெழுத்தான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம்,  ரூ.1,558 கோடிமுதலீடுகள் ஈர்க்கப்பட்டு 600 வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன.


துபாய் சுற்றுப்பயணம்:


உள்ளூரில் தொழில் முன்னேற்றம் தொடர்பாக பல்வேறு ஒப்பந்தங்களை மேற்கொண்ட தமிழக அரசு, வெளிநாடுகளில் இருந்து முதலீடுகளை பெற ஆர்வம் காட்டியது. அந்த வகையில் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக ஸ்டாலின், கடந்த மார்ச் மாதம் துபாயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அந்த சுற்றுப்பயணத்தின் மூலம் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு,  ரூ.6,100 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு 14,700 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதன்படி, மொத்தமாக 192 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்துள்ள தமிழக அரசு, 3 லட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாகும் சாத்தியக்கூறுகள் உள்ளன.


முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்:


தமிழக அரசு ஈர்த்துள்ள தொழில் முதலீடுகள் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட டிவிட்டர் பதிவில்,  2020-ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்துடன் ஒப்பிடும்போது 2021-ம் ஆண்டு அந்நிய நேரடி முதலீடு ரூ.17,696கோடி அதாவது 41.5% அதிகரித்துள்ளது. அதில், 2021-ம் ஆண்டு அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் ரூ.9,332 கோடி அதாவது 53%  அதிகரித்துள்ளது என குறிப்பிட்டு இருந்தார். இதனிடையே, 2023-ம் ஆண்டு இறுதிக்குள் 'உலக முதலீட்டாளர்கள் சந்திப்பு' நிகழ்வை நடத்தி, தமிழகத்திற்கு கூடுதல் முதலீடுகளை பெற முதலமைச்சர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.


1 டிரில்லியன்  டாலர் பொருளாதாரம்:


'2030 ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமுள்ள மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற வேண்டும்' என முதலமைச்சர் ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்துள்ளார். இந்த இலக்கை எட்டிப் பிடிக்கும் வகையில், 'மாநிலத்தில் தயாரிக்கப்படும் அனைத்துப் பொருள்களும் உலகின் அனைத்து நாடுகளுக்கும் சென்று சேர வேண்டும்' என்ற முனைப்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


ஏற்றுமதியிலும் முன்னேற்றம்:


அதன் விளைவாக தமிழகத்தில் இருந்து ஆண்டுக்கு ரூ.1.93 லட்சம் கோடி அளவுக்கு பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. ஏற்றுமதி துறையில் இந்தியாவின் மூன்றாவது பெரிய மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. தேசிய ஏற்றுமதிக்கான தமிழ்நாட்டின் பங்கு என்பது 2020-21 ஆம் ஆண்டு நிலவரப்படி 8.97 சதவீதமாக இருந்தது. 


மத்திய அரசு பட்டியலில் முன்னேற்றம்:


அண்மையில், மத்திய அரசின் சார்பில் இந்தியாவில் எளிதாக தொழில் செய்யக்கூடிய மாநிலங்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், தொழில் தொடங்குவதற்கு ஏற்ற இடம், எளிதாக வணிகம் செய்யும் வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில்,  மாநிலங்களின் தரவரிசைப் பட்டியல்  வெளியானது. இந்த தரவரிசைப் பட்டியலில் கடந்த ஆண்டு 14 ஆவது இடத்தில் இருந்த தமிழ்நாடு நடப்பாண்டில் 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. 


அரசின் நலத்திட்டங்கள் அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்து, அனைத்து பகுதிகளும் சமமான வளர்ச்சியை அடைய வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அந்த வகையில், சென்னை, கோவை மற்றும் திருப்பூர் போன்ற தொழில் நிறைந்த மாவட்டங்கள் மட்டுமின்றி, அனைத்து மாவட்டங்களுக்கும் தொழில் முதலீடுகளை ஈர்க்க அரசு கவனம் செலுத்தி வருகிறது. இதன் மூலம் மாநிலத்தின் சமமான வளர்ச்சியை உறுதி செய்வது மட்டுமல்லாமல், மக்களின் வாழ்வாதாரமும் ஒருசேர மேம்படும் என தமிழக அரசு தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.