தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் (ஆகஸ்ட் 5) இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது. 


அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கு தயாராகும் வகையில் அனைத்து கட்சிகளும் தங்களது பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக திட்டமிட்டு வருகிறது. உதாரணத்திற்கு, எதிர்க்கட்சியாக அதிமுக மதுரையில் மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ‘ என் மண், என் மக்கள்’ என்ற பெயரில் பிரச்சார நடைபயணத்தை தொடங்கி நடத்தி வருகிறார். 


அந்தவகையில், தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியான திமுகவும், தற்போது நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் ஆரம்ப கட்ட பணிகளை தொடங்கியுள்ளது. அதன் அடிப்படையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா மூலம் தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் திமுகவின் இரண்டு ஆண்டு கால ஆட்சி சாதனை, சிறப்பு திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் கூற இருக்கின்றன. இது நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சார வியூகமாகவும் பார்க்கப்படுகிறது. மேலும், வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் வரை திமுகவை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் எந்தவிதமான சர்ச்சையிலும் சிக்கக்கூடாது என்றும், அப்படி சிக்கினால் பதவி பறிப்பு உடனே நடைபெறும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 


திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: 


தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டமானது இன்று காலை 10.30 மணியளவில் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் 72 பேரும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். கடந்த மார்ச் 21ம் தேதி மற்றும் மே 14ம் தேதியும் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா குறித்து ஆலோசிப்பதற்காக நடந்தது.  


முன்னதாக, திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் (ஆகஸ்ட் 5ம் தேதி) இன்று காலை நடைபெறும் என திமுக பொதுச் செயலாளர் துரை முருகன் அறிக்கை மூலம் தெரிவித்திருந்தார். அந்த அறிக்கையில், “ திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் வருகிற ஆகஸ்ட் 5ம் தேதி (சனிக்கிழமை) காலை 10.30 மணி அளவில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும். 


அதுபோது மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். 


பொருள் : தமிழின தலைவர் கலைஞர் நூற்றாண்டு விழா” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.