விழுப்புரம் : திண்டிவனத்தில் சிறுவர்கள் பட்டாசு வெடித்ததில் தீபொறி பட்டு கூறை வீடு சாம்பலானது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் ஒத்தவாடை தெருவை சேர்ந்தவர் ஜோதி வயது 45, இவர் கூலி வேலை செய்து வருகிறார், மேலும் இவரது தம்பி சந்தோஷ் வயது 40 ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.


சந்தோஷ் சொந்த வேலைக்காக வெளியூர் சென்று இருந்தார், ஜோதி மட்டும் ஒத்தவாடை தெருவில் கூரை வீட்டில் வசித்து வந்தார். இவர் இன்று வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென வீடு தீப்பிடித்து எரிந்தது. இதை கண்ட அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயன்றனர். தீ அதிகமாக பரவியதால் திண்டிவனம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.


இந்த நிலையில் வீடு முழுவதும் எரிந்து சாம்பலானது. இதில் வீட்டில் இருந்த பணம் 10,000 ஆயிரம், வெள்ளிப் பொருட்கள், கட்டில், பீரோ,  மற்றும் டி.வி., மிக்சி, கிரைண்டர், உள்ளிட்ட பொருட்களும், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பத்திர ஆவணங்கள், சான்றிதழ்கள் உள்ளிட்டவை எரிந்து சேதம் அடைந்தன. திண்டிவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அப்பகுதியில் சிறுவர்கள் பட்டாசு வெடித்ததாக கூறப்படுகிறது. அதிலிருந்து தீப்பொறியானது கூரை வீடு முழுவதும் எரிந்தது. தீ விபத்தில் ஜோதி அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்து தப்பித்ததால், உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.