தொடர்ச்சியான பயன்பாட்டுக்கு தள்ளும் மருந்துப் பொருட்களை சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்வதோ அல்லது மருத்துவரின் சீட்டு இல்லாதவருக்கு வழங்குவதோ சட்டத்தை மீறும் செயலாகும் என தமிழக அரசு புதிய அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. புதிய அரசாணையின்படி, மருந்து மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம் 1940 மற்றும் மருந்துகள் சட்டம் 1945இன் கீழ் மருத்துவரின் மருந்துச் சீட்டு மற்றும் விற்பனை ரசீது இல்லாமல், நுகர்வோர் தவறாகப் பயன்படுத்துவதற்காக போதை அல்லது தொடர்ச்சியாக பயன்படுத்த உந்தும், மருந்துகளை விற்பனை செய்வது விதிகளை மீறுவதாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


மேற்கண்ட விதியை மீறும் மருந்துக் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், போதை போன்ற தொடர்ச்சியான பயன்பாட்டுக்கு உந்தும் மருந்துகளை விநியோகம் செய்யும் மொத்த வியாபாரிகளின் உரிமங்களும் ரத்து செய்யப்படும் என தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் தெரிவித்துள்ளது.




முன்னதாக, மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள காம்பியா நாட்டில் 66 குழந்தைகள் மரணம் அடைந்ததற்கு ஹரியானாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மற்றும் சளி மருந்தை உட் கொண்டது காரணமாக இருக்கலாம் என உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருந்தது.


இந்நிலையில், இந்திய அரசு இதுகுறித்த விசாரணையை தொடங்கியுள்ளது. கடந்த செப்டம்பர் 29 அன்று, இருமல் மருந்து குறித்து இந்திய மருந்துகள்  கட்டுப்பாட்டு ஆணையத்திற்கு (DCGI) உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்ததாக சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் உயர்மட்ட வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.


மத்திய மருந்துகள் தரநிலைக் கட்டுப்பாட்டு அமைப்பான டிசிஜிஐ, உடனடியாக ஹரியானா ஒழுங்குமுறை ஆணையத்திடம் இந்த விஷயத்தை எடுத்து சென்று, விசாரணையை தொடங்கியதாகக் கூறப்படுகிறது.


இந்த இருமல் மருந்து ஹரியானாவின் சோனேபட்டில் உள்ள மெய்டன் பார்மாசூட்டிகல் லிமிடெட் மூலம் தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது கிடைத்த தகவலின்படி, நிறுவனம் இந்த மருந்துகளை காம்பியாவிற்கு மட்டுமே ஏற்றுமதி செய்ததாக தெரிகிறது. குற்றச்சாட்டுகளுக்கு மெய்டன் பார்மாசூட்டிகல் நிறுவனம் இன்னும் பதிலளிக்கவில்லை. டெல்லியின் பீடம்புராவில் உள்ள நிறுவனத்தின் நிர்வாக அலுவலகம் இன்று காலை மூடப்பட்டது.
 
இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு ட்விட்டர் பக்கத்தில், "காம்பியாவில் அடையாளம் காணப்பட்ட நான்கு அசுத்தமான மருந்துகள் குறித்து உலக சுகாதார அமைப்பு இன்று மருத்துவ தயாரிப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. கடுமையான சிறுநீரக பிரச்னை ஏற்படுவதற்கும் 66 குழந்தைகள் உயரிழந்ததற்கும் அதற்கும் தொடர்பு இருக்கலாம். இந்த இளம் உயிர்களின் இழப்பு அவர்களது குடும்பங்களுக்கு மனவேதனைக்கு அப்பாற்பட்ட வலியை ஏற்படுத்தியுள்ளது.


அந்த நான்கு மருந்துகள் அதாவது இருமல் மற்றும் சளி மருந்துகள் இந்தியாவில் மெய்டன் பார்மாசூட்டிகல்ஸ் லிமிடெட் மூலம் தயாரிக்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள அந்நிறுவனம் மற்றும் ஒழுங்குமுறை அதிகாரிகளுடன் உலக சுகாதார அமைப்பு மேலும் விசாரணை நடத்தி வருகிறது.


அந்த அசுத்தமான மருந்து பொருள்கள் இதுவரை காம்பியாவில் மட்டுமே கண்டறியப்பட்டாலும், அவை மற்ற நாடுகளுக்கு விநியோகிக்கப்பட்டிருக்கலாம். நோயாளிகளுக்கு மேலும் தீங்கு விளைவிப்பதைத் தடுக்க அனைத்து நாடுகளும் இந்த தயாரிப்புகளைக் கண்டறிந்து அவற்றை புழக்கத்தில் இருந்து அகற்றுவதை உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கிறது.


நான்கு மருந்துகளில் ஒவ்வொன்றின் மாதிரிகளையும் ஆய்வக பரிசோதனை செய்ததில், அவற்றில் ஏற்றுக்கொள்ள முடியாத அளவு டைதிலீன் கிளைகோல் மற்றும் எத்திலீன் கிளைகோல் ஆகியவை மாசுபாடுகளாக இருப்பதை உறுதிப்படுத்துகிறது" எனக் குறிப்பிட்டுள்ளது.