தீபாவளியை முன்னிட்டு கடலூர் மாவட்டம் வேப்பூர் வாரச்சந்தையில் இன்று 4 மணி நேரத்தில் 4 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.
ரம்ஜானுக்கு பிரியாணி என்றால், தீபாவளிக்கு இட்லி, கறிக் குழம்பு காம்பினேஷன். தென் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் குறிப்பாக மதுரையில் முதல்நாளே கிலோ கணக்கில் ஆட்டுக்கறி வாங்கும் பழக்கம் உள்ளது.
இதனால் ஆடுகளை வாங்க இப்போதே வியாபாரிகள் முனைப்பு காட்டிவருகின்றனர். அந்த வகையில் இன்று காலையில் கடலூர் வேப்பூர் ஆட்டுச் சந்தையில் வியாபாரிகள் குவிந்தனர். திட்டக்குடி அடுத்து இந்த கிராமம் உள்ளது. எப்பவுமே இங்கே வெள்ளிக்கிழமையில் தான் ஆட்டுச்சந்தை நடைபெறும். தீபாவளி வரும் நவம்பர் 4 ஆம் தேதி கொண்டாடப்படுவதால், இந்த வெள்ளிக்கிழமை சந்தையைத் தவறவிடாத வியாபாரிகள் பெருமளவில் குவிந்தனர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்த சந்தைக்கு ஆடுகளை வளர்ப்பவர்கள் கொண்டு வருவார்கள். இங்கிருந்து மொத்தமாகவும், ஒன்றிரண்டு என சில்லறையாகவும் வியாபாரிகள் ஆடுகளை வாங்கிச் செல்வதுண்டு. அப்படியாக இன்று காலை 7 மணிக்கு சந்தை தொடங்கியது. 4 மணி நேரத்தில் சந்தையில் ரூ.4 கோடி அளவுக்கு விற்பனை நடந்துள்ளது.
வழக்கமாக இங்கு வரும் வியாபாரிகளிடம் ஆட்டுக்கு ரூ.30 என்று வேப்பூர் ஊராட்சி சார்பில் கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால், தீபாவளி பண்டிகை மெகா சந்தை என்பதால் இன்று ஒரு ஆட்டுக்கு ரூ.60 வசூல் செய்துள்ளனர். ஆனால், ரசீதில் ரூ.30 என்று மட்டும் பதிவு செய்து கொடுத்துள்ளனர். வியாபாரிகள் ஆட்டுக்கு லாபம் கிடைத்தாலும் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிப்பது பகல் கொள்ளை எனக் கொந்தளித்தனர்.
தமிழகத்தின் சில பிரபலமான சந்தைகள்..
எட்டயபுரம் ஆட்டுச் சந்தை
தமிழகத்தின் புகழ்பெற்ற ஆட்டுச் சந்தைகளில் ஒன்று, தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் நடைபெறும் ஆட்டுச் சந்தை. வாரம்தோறும் சனிக்கிழமை நடைபெறும் இந்த ஆட்டுச் சந்தைக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து பொதுமக்களும் வியாபாரிகளும் வந்து கலந்துகொள்வார்கள்.
குந்தாரப்பள்ளி கால்நடை சந்தை..
கிருஷ்ணகிரி அடுத்துள்ள குந்தாரப்பள்ளியில் நடைபெறும் கால்நடை விற்பனை சந்தை மிகவும் பிரபலம். மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதியிலிருந்து இங்கே விற்பனைக்காக கொண்டு வரும் கால்நடைகள் தரமாகவும் ஆரோக்கியத்துடனும் காணப்படுவதால் நல்ல வரவேற்பு உள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் வரும் வியாபாரிகள் இங்கு கால்நடைகளை வாங்கி செல்கின்றனர்.
கன்னிவாடி ஆட்டுச்சந்தை:
தமிழகத்தில் நடைபெறும் பெரிய ஆட்டு சந்தைகளில் ஒன்று கன்னிவாடி ஆட்டுச்சந்தை ஆகும் . இந்த சந்தை வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று நடைபெற்று வருகிறது. இந்த சந்தைக்கு கோவை, பொள்ளாச்சி, உடுமலை, மதுரை, திருச்சி, சென்னை போன்ற தமிழகத்தின் பெருநகரங்கள் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் கன்னிவாடி ஆட்டுச் சந்தையில் வந்து ஆடுகளை வாங்கி செல்கின்றனர்.
திருப்புவனம் ஆட்டுச் சந்தை:
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஆட்டுச் சந்தை. இந்தச் சந்தை தென் மாவட்டத்தில் மிகவும் பிரபலம். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் இங்கு சந்தை நடைபெறும். இந்த வாரம் தீபாவளி வியாழக்கிழமை வருவதால் வரும் செவ்வாய்க்கிழமை திருப்புவனம் சந்தையில் 10 கோடி ரூபாய் வரை வியாபாரம் என எதிர்பார்க்கப்படுகிறது.