உளுந்தூர்பேட்டையில் தான் காதலித்த திருநங்கையை இளைஞர் கரம்பிடித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர் மக்கள் முன்னிலையில் திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்துள்ளது. காதலுக்கு கண்ணில்லை என்பதெல்லாம் மலையேறிப்போன வாசகம். காதலுக்கு சாதி, மதம், இனம் என்று எதுவுமே கிடையாது என்பதை, இக்காலத்தில் நடைபெறும் பல திருமணங்கள் நிரூபித்து வருகின்றன. இரு மனங்கள் இணைய எதுவும் தடையில்லை என்பதை பல நிகழ்வுகள் உறுதி செய்துள்ளது.
அன்பு ஒன்றே நிலையானது, அதற்கு மேலானது எதுவும் இல்லை என்பதே நிதர்சனம். காதல் கரங்கள் இதே கோட்பாட்டை மெய்பிக்கும் விதமாக கள்ளகுறிச்சியில் அரங்கேறியது தான் மனோ - ரியா திருமணம். திருநங்கையான ரியா (25) சென்னையில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார். அப்போது தான் சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த மனோவுடன் ரியாவுக்குப் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில், இருவரின் அன்பு பரிமாற்றம் காதலாக மாறியது. காதல் வயப்பட்ட மனோவும், ரியாவும் தங்கள் வாழ்க்கையை உறுதி செய்ய தீர்மானித்தனர். மனோவின் பெற்றோர் இந்த திருமணத்திற்கு தடையாக இருப்பர் என்ற எண்ணம் இருவருக்குள்ளும் இருந்தது.
இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட உளுந்தூர்பேட்டையில் வாடகை வீடெடுத்து இருவரும் குடிபெயர்ந்தனர். தொடர்ந்து திருமணம் செய்து புதுமண வாழ்க்கையை தொடங்க முடிவு செய்த இவர்கள், தங்களின் நண்பர்கள், மூலம் அதற்கான ஏற்பாடுகளை செய்தனர். மனோ - ரியா திருமணம் விழாகோலம் போல அனைத்து திருமண ஏற்பாடுகளும் சிறப்பாக நடந்தது. தகவல் அறிந்து திருநங்கைகள் திருமணத்திற்கு நேரில் வந்திருந்தனர். நண்பர்களால் பிளெக்ஸ் பேனர், சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு திருமணத்திற்காக அழைப்பிதழ் விடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அக்டோபர் 27ஆம் தேதி மனோ - ரியா ஆகிய இருவருக்கும் திருமணம் தடபுடலாக நடந்தது. மங்கள வாத்தியங்கள் முழங்க, இந்து முறைப்படி மணமேடைக்கு வந்த ரியாவுக்கு மனோ தாலிகட்டி, காதல் சின்னத்துக்கு சாட்சியானார். அம்மி மிதித்து அருந்ததியும் பார்த்தாச்சு. மணமக்களை அனைத்து நட்புகளும், அக்கம்பக்க உறவுகளும் வாழ்த்திச் சென்றனர். உலகளவில் உள்ள சமூக செயற்பாட்டாளர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள் இந்த திருமணம் குறித்து தகவலறிந்து மணமக்களை சமூக வலைதளங்கள் வழியாக வாழ்த்துகளை பொழிந்து வருகின்றனர். திருநங்கைகளால் பெருவிழாவாகக் கொண்டாடப்படும் கூத்தாண்டவர் கோயில் அமைந்துள்ள உளுந்தூர்பேட்டை பகுதியில் இந்த திருமணம் நடைபெற்றது மிகவும் சிறப்பாகப் பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, கடந்த ஆண்டில், கோயம்புத்தூர் மாவட்டம் குனியமுத்தூரைச் சேர்ந்த மணிகண்டனுக்கும், சுரேகா என்ற திருநங்கைக்கும் திருமணம் நடந்தது. அதனை பதிவுசெய்ய அவர்கள் சார் பதிவாளர் அலுவலகத்தை அணுகியபோது, அவர்கள் திருமணம் பதிவுசெய்ய மறுக்கப்பட்டது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த தம்பதி, தங்கள் திருமணத்தை பதிவு செய்ய அரசு அலுவலர்களுக்கு உத்தரவிடும்படி கோரிக்கை வைத்தது. அதனை ஏற்றுகொண்ட நீதிமன்றம் மணிகண்டன் சுரேகா திருமணத்தை அங்கீகரத்து பதிவு செய்து கொடுக்கும் படி அரசு அலுவலர்களுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, வடவள்ளி சார் பதிவாளர் அலுவலகத்தில் மணிகண்டன் சுரேகா தம்பதியினர் திருமணத்தைப் பதிவு செய்தனர். தமிழ்நாட்டில் திருநங்கை இளைஞர் தம்பதியினரின் திருமணம் பதிவு செய்யப்பட்டது, இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.