தமிழ்நாட்டில் விழா காலங்கள் என்றாலே வெளியூர்களில் வசிப்பவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று குடும்பத்துடன் கொண்டாடுவது வழக்கம். குறிப்பாக, தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகை நாட்களில் மக்கள் தங்கள் குடும்பங்களுடன் கொண்டாடுவதற்காக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம்.
3 நாட்களில் 5 லட்சம் பேர்:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் சுமார் 14 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் சென்னை, கோவை, திருப்பூர், மதுரை, நெல்லை, சேலம், திருச்சி உள்ளிட்ட நகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு படையெடுத்தனர். சென்னையில் மட்டும் 3 நாட்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு லட்சக்கணக்கான மக்கள் பயணித்துள்ளனர்.
இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “ தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையின் சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பேருந்துகளின் இயக்கத்தால் நேற்று நள்ளிரவு 12 மணி நிலவரப்படி, வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையான 2 ஆயிரத்து 92 பேருந்துகளுடன், 2 ஆயிரத்து 172 சிறப்பு பேருந்துகள் என கடந்த 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை இரவு 12 மணி வரை மொத்தம் 10 ஆயிரத்து 784 பேருந்துகளில் மொத்தம் 5 லட்சத்து 76 ஆயிரத்து 358 பயணிகள் பயணித்துள்ளனர்.
நாளை முதல் சிறப்பு பேருந்துகள்:
சென்னையில் இருந்து மட்டும் லட்சக்கணக்கான மக்கள் பயணித்துள்ளனர். பொதுமக்களின் வசதிக்காக கிளாம்பாக்கம், மாதவரம், கோயம்பேட்டில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டது. தீபாவளி பண்டிகைக்காக வெளியூர் சென்ற பயணிகள் மீண்டும் சென்னை திரும்புவதற்காக அரசு சார்பில் சுமார் 9 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இந்த பேருந்துகள் நாளை முதல் இயக்கப்பட உள்ளது.
அரசு பேருந்துகள் மட்டுமின்றி தனியார் பேருந்துகள், ரயில்கள், கார்கள் என மொத்தம் 15 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர் என்று கூறப்படுகிறது.