இருளை நீக்கி ஒளியை கொடுக்கும் பண்டிகையான தீபாவளி பண்டிகையை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகையை புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து, இனிப்பு வகைகளை உண்டு மகிழ்ச்சியுடன் கொண்டாடுவது வழக்கம். 


கறிக்கடையில் குவிந்த மக்கள்


அதே வேளையில் நாவிற்க்கு ருசியாக அசைவ உணவுகளை தயாரித்து குடும்பத்தினர் மற்றும் நண்பர்களோடு அசைவ விருந்து உண்டு மகிழ்வதும் வாடிக்கை. அந்த வகையில் தீபாவளி பண்டிகையை அசைவ விருந்துடன் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், காஞ்சிபுரம் பகுதிகளில் உள்ள மட்டன், சிக்கன் விற்பனை செய்யும் இறைச்சி கடைகளில் காலை நேரத்திலேயே ஏராளமான அசைவ பிரியர்கள் தங்களுக்கு தேவையான மட்டன், சிக்கன் இறைச்சி வகைகளை தங்களுக்கு தேவையான அளவிற்கு வாங்கி சென்றனர்.


நியாய விலைக் கடைகளில் தான் வரிசையில் நின்று பொருட்களை வாங்குவோம் என்ற நிலையில், தற்பொழுது காலம் மாறி, காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில் உள்ள ஓரிக்கை,கீழ் கேட்,காமாட்சி அம்மன் கோவில் சன்னதி தெரு, ஓரிக்கை மற்றும் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள இறைச்சி விற்பனை கடையில் ஏராளமான அசைவ பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மட்டன் சிக்கன் இறைச்சி வகைகளை தங்கள் வீடுகளுக்கு வாங்கிச் சென்றனர்.


அசைவப் பிரியர்கள் இறைச்சி கடை வாசலில் இறைச்சி வாங்கிச் செல்ல நீண்ட வரிசையில் காத்திருப்பதை வழியே சென்ற பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.


சொந்த ஊருக்கு படை எடுத்த மக்கள்


தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் இருந்து மட்டும் சுமார் 11 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட்டது. அதன் மூலம் சுமார் 3 லட்சம் பயணிகள் சொந்த ஊர்களுக்குச் சென்றனர். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கடந்த 3 நாட்களாக பயணிகள் கூட்டம் அலைமோதி வந்தது. பேருந்துகள் மட்டுமின்றி ரயில்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. பொதுமக்களின் வசதிக்காக தெற்கு ரயில்வே சார்பில் தீபாவளிக்காக சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டது.


புத்தாடைகள், பட்டாசு விற்பனை:


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை என பெருநகரங்கள் மட்டுமின்றி தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் புத்தாடைகள் விற்பனை சிறப்பாக நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான கோடியில் புத்தாடைகளின் விற்பனை நடைபெற்றுள்ளது.


தீபாவளி என்றால் பட்டாசுகள் இல்லாமல் நிறைவடையாது என்பதால் பட்டாசுகளின் விற்பனையும் சிறப்பாகவே நடைபெற்றது. ஆனால், கடந்தாண்டுடன் ஒப்பிடும்போது பட்டாசு விற்பனை மந்தமாக நடைபெற்றது என்றே குறிப்பிட வேண்டும். பட்டாசுகள் தயாரிப்பிற்கான கட்டுப்பாடு, இணையவழி பட்டாசு விற்பனை உள்ளிட்ட பல காரணங்களால் விற்பனை மந்தமானதாக கூறப்படுகிறது. சென்னைத் தீவுத்திடலிலும் பட்டாசு விற்பனை மந்தமாக நடைபெற்றதாகவே கூறப்படுகிறது. நேற்று பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்ததாலும் விற்பனை மந்தம் அடைந்தது.