தீபாவளி பண்டிகை முடிந்து திருப்பூர் கோயம்புத்தூர் செல்ல போதிய பேருந்துகள் இல்லாத நிலையில்  சுற்றுலா வாகனங்கள் பயணிகள் பேருந்துகளாக மாற்றம் மதுரையில் இருந்து கோயம்புத்தூருக்கு 500 ரூபாய் கட்டணம் விதிப்பு பயணிகள் அவதி.

 

தென் மாவட்டங்களில் குவிந்த பொதுமக்கள்  

 

தீபாவளி என்பது ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக கொண்டாடப்படும் முக்கிய விழாவாகும், நடப்பாண்டில் கடந்த வியாழக்கிழமை தீபாவளி வந்ததை தொடர்ந்து, வெள்ளிக்கிழமை அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தது. இதன்காரணமாக வார இறுதியுடன் சேர்த்து, மொத்தமாக நான்கு நாட்கள் தொடர் விடுமுறை அமைந்துள்ளது.

 

இதனை கொண்டாடும் விதமாக, சென்னையில் இருந்து மட்டுமே லட்சக்கணக்கானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர். தென்மாவட்டங்களில் மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், தூத்துக்குடி, நெல்லை என பல்வேறு மாவட்டங்களுக்கும் மக்கள் படையெடுத்தனர். தென் மாவட்டங்களில் முக்கிய பகுதியாக விளங்கும் மதுரையில் அதிகளவு கூட்டத்தை பார்க்க முடிந்தது.

 


 

மதுரையில் இருந்து கோவை செல்ல 500 ரூபாய் கட்டணம்

 

தீபாவளி பண்டிகை விடுமுறை நான்கு நாட்கள் முடிவடைந்து, மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பயணிகளுக்கு போதிய அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை என சொல்லப்படுகிறது.

 

மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து சுற்றுலா பேருந்துகள் மற்றும் சுற்றுலா வாகனங்களை பயணிகள் வாகனங்களாக மாற்றப்பட்டு 170 ரூபாய் கட்டணத்திற்கு பதிலாக 500 ரூபாய் கட்டணம் வசூலித்து வாகனங்கள் இயக்கப்படுவதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர். போதிய அரசு பேருந்துகள் இல்லாத நிலையில் தனியார் வாகனங்கள் சட்டவிரோதமாக அதிக கட்டணங்களை வசூலிப்பதாக பயணிகள் புகார் தெரிவித்தனர். பேருந்துகள் இல்லாத நிலையில் திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் நீண்ட நேரமாக காத்திருக்கும் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகிவருகின்றனர்.

 

 

நிரம்பி வழியும் பேருந்துகள்:

 

பேருந்து நிறுத்தத்தில் போதிய இடம் இல்லாத நிலையில் சாலையோரத்தில் நீண்ட நேரமாக பேருந்துகளுக்காக காத்திருக்கும் பயணிகள் கால்கடுக்க காத்திருக்கும் நிலை உள்ளது. சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக கூறி பேருந்து நிலையங்களுக்குள்ளே வராமல் வெளியில் இருந்தபடியே சென்றதால், பேருந்து நிலையத்தில் இருக்கக்கூடிய பயணிகள் ஒவ்வொரு பேருந்துகளிலும் சென்று ஏறிய பின்பாக பின்னர் ஏமாற்றத்துடன் இறக்கி விடும் நிலை ஏற்படுகிறது. எல்லா பேருந்தும் நிரம்பி வருகிறது 3 மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்கிறோம், பேருந்துகளில் போதியளவு இடமில்லை, அதிகாரிகள் என்ன செய்கிறார்கள்? என்று தெரியவில்லை என பயணிகள் புலம்பினர்.