நவீன அறிவியல் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.‌ வாகனங்களிலும் விபத்து ஏற்படாமல் இருக்க நவீன அறிவியலின் உதவியுடன், பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்படுகிறது. வாகனங்களில் என்னதான் நவீன முறையில், பல்வேறு அம்சங்கள் கொண்டு வந்தாலும் பொதுமக்களின் நம்பிக்கை என்பது வாகனத்திற்கு பூஜை போட்டால் பிரச்சனை இல்லாமல் நடக்கும் என்பது இந்திய கலாச்சாரத்தில் இன்றியமையாத ஒன்றாக உள்ளது. 




புதிதாக வாங்கும் வாகனம், நீண்ட தூரம் செல்லும் வாகனம் என எந்த வாகனமாக இருந்தாலும் பூஜை போடுவது என்பது வழக்கமான ஒன்றாக உள்ளது. இவ்வாறு பூஜை செய்வது இந்து மதத்தை தாண்டி பிற மதத்தை சார்ந்தவர்கள் கூட செய்வதுதான் ஆச்சரியமிக்க ஒன்றாக உள்ளது. 


பெருங்களத்தூர் இரணியம்மன் கோயில் 


அந்த வகையில் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்னையின் நுழைவு வாயிலாக கருதப்படும், பெருங்களத்தூர் பகுதியில் இருக்கும் கோயில் ஒன்றில்  தினமும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் பூஜை போடுவது என்பது பல ஆண்டுகளாக வழக்கத்தில் இருந்தது. ஏன் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல கோயில்கள் இருந்தும், இந்தக் கோயில் மிகப் பிரசித்தி பெற்ற கோயிலாக மாறியது எப்படி என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.


சென்னை -  திருச்சி தேசிய நெடுஞ்சாலை


சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை தமிழ்நாட்டில் உள்ள முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளில் ஒன்றாக இருந்து வருகிறது. சென்னையின் தென்மேற்கு பகுதியில் கத்திப்பாரா சந்திப்பில் தொடங்கி பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விக்கிரவாண்டி, விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, பெரம்பலூர், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல் போன்ற நகரங்கள் வழியாக தேனியில் முடிகிறது.


வாகனங்களுக்கு பூஜை போடும் வழக்கம் 


முக்கிய தேசிய நெடுஞ்சாலையாக இருப்பதால் நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள், பல ஆயிரக்கணக்கான கார்கள் இந்த சாலையை பயன்படுத்துகின்றன. எப்போதும் பரபரப்பாக இந்த சாலை இருந்து வருகிறது. அதேபோன்று இந்த சாலையில் இருக்கும், பெருங்களத்தூர் அருள்மிகு இரணியம்மன் கோயிலும் பரபரப்புடன் காணப்படும். இதற்கு முக்கிய காரணமாக இந்த வழியாக செல்லும் பெரும்பாலான வாகனங்கள், இந்தக் கோயிலில் எலுமிச்சம் பழம், தேங்காய் பூசணிக்காய் ஆகியவற்றை வைத்து சுத்தி போட்ட பிறகு வாகனங்கள் தங்களது பயணத்தை தொடங்குவது என்பது எழுதப்படாத விதியாக உள்ளது.




குறிப்பாக சென்னையில் இருந்து செல்லும் கனரக வாகனங்கள், நல்ல காரியங்களுக்கு செல்லும்போது மக்கள் என அனைவரும் இந்த கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டு வாகனங்களுக்கு பூஜை போட்ட பிறகு புறப்படுவதால் எப்போதுமே இந்த பகுதி பரபரப்புடன் காணப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலை காரணமாக இந்த கோயில் பிரசித்தி பெற்ற கோவிலாக மாறியதாக அப்பகுதி மக்கள் தெருவில் இருக்கின்றனர். கத்திப்பாராவிலிருந்து இந்த தேசிய நெடுஞ்சாலை தொடங்கினாலும், போக்குவரத்து நெரிசல் இந்த பகுதியில் ஆரம்ப கட்டத்தில் குறைவாக இருந்ததாகவும், அப்போது இந்த கோயிலில் பூஜை போட்டுவிட்டு செல்லும் வழக்கம் தொடங்கியதாக தெரிவிக்கின்றனர்.


வாகன ஓட்டிகளின் நம்பிக்கை


தற்போது படிப்படியாக அதிகரித்து இது ஒரு வழிபாடாகவே மாறி உள்ளது. சாலை வழியாக செல்பவர்கள் பெரும்பாலானோர் இந்த கோயிலில் பூஜை போட்டுவிட்டு செல்வதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். சென்னை எல்லை முடியும் இடமாகவும் இந்த இடத்தை பொதுமக்கள் கருதுவதால், பயணம் பாதுகாப்பாக அமைய கடவுள் உறுதுணை இருக்க வேண்டும் என நம்பிக்கையில் பொதுமக்கள் இங்கு பூஜை போடுகின்றனர். இரவு நேரங்களிலும் எப்போதும் இந்த இடத்தில், பூ மற்றும் எலுமிச்சம் பழம் கடைகள் செயல்படுவது குறிப்பிடத்தக்கது.


இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், பல ஆண்டுகளாகவே சென்னையிலிருந்து நெடுந்தூரம் பயணத்திற்கு செல்பவர்கள் வழித்துணையாக இரணியம்மன் வரவேண்டும் என்பதற்காக இங்கு பூஜை போடுகிறோம். இங்கு பூஜை போட்டு வாகனத்தை நெடுந்தூரம் இயக்குவது மனதிற்கு அமைதியையும் நம்பிக்கையும் தருவதாக தெரிவிக்கின்றனர். சில சமயங்களில் பூஜை போடாமல் வாகனத்தை இயக்கினால், அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதாகும் வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.