தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக திகழும் விஜய். கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் கட்சியைத் தொடங்கினார். தமிழக வெற்றிக் கழகம் தொடங்கியபோது சிலர் அவரை கடுமையாக விமர்சித்தனர். ஆனால், விஜய் அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்பு இருந்த அவருக்கு மிகப்பெரிய ஆதரவு தெரிவித்து வந்தவர் சீமான்.

விஜய்யை தாக்கும் சீமான்:


ஆனால், விக்கிரவாண்டியில் நடைபெற்ற அரசியல் மாநாட்டில் நடிகர் விஜய் திராவிடமும், தமிழ் தேசியமும் எனது இரு கண்கள் என்று கூறியது சீமானுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. அப்போது முதல் ஒவ்வொரு பேட்டியிலும் விஜய்யையும், அவரது கொள்கையையும் சீமான் மிக கடுமையாக விமர்சித்து வருகிறார். 


சீமான் நடிகர் விஜய்யுடன் அடுத்த சட்டமன்ற தேர்தலில் கைகோர்ப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சீமான் தொடர்ந்து விமர்சித்து வருவது தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், விஜய்யை சீமான் விமர்சிப்பது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், விருதுநகர் எம்.பி.யுமான மாணிக்கம் தாகூர் கூறியிருப்பதாவது,


சீமானுக்கு அச்சம்:


“ விஜய் வருகையால் இழப்பு ஏற்படும் என்பது நேரடியாக தெரிந்துவிட்டதால் சீமான் விமர்சிக்கிறார். தனது ஆதரவாளர்கள் தன்னை விட்டு சென்று விடுவார்கள் என்ற கவலை, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு வந்திருக்கலாம். விஜய்யின் வருகை தனது கட்சியின் கூடாரத்தை காலி செய்துவிடுமோ என்ற அச்சம் சீமானுக்கு ஏற்பட்டுள்ளது” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


விஜய் தனது கருத்தியல் மற்றும் அரசியல் எதிரிகள் பா.ஜ.க. மற்றும் தி.மு.க. என்று கூறியுள்ள நிலையில், நாம் தமிழர் சீமான் அவரை மிக கடுமையாக விமர்சித்து வருகிறார். இளைஞர்கள் பலரும் விஜய்யின் ரசிகர்களாக உள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியிலும் பலரும் விஜய்யின் ஆதரவாளராக உள்ளனர். இதனால், அடுத்த தேர்தலில் இளைஞர்களின் வாக்குகளை அதிகம் கொண்ட சீமானின் வாக்கு சதவீதத்தில் நடிகர் விஜய்யின் வருகையால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்று அரசியல் வல்லுனர்கள் கணித்துள்ளனர்.


தாக்கத்தை ஏற்படுத்திய விஜய்யின் அறிவிப்பு:


மேலும், விஜய்யின் தி.மு.க.வையும், பா.ஜ.க.வையும் தங்களது எதிரிகள் என்று கூறியுள்ள நிலையில், மற்ற கட்சியினரை விமர்சிக்கவில்லை. தன்னுடைய செயல்திட்டங்கள், கொள்கைகளையும் அவர் அறிவித்துள்ளார். இதுதவிர, தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைந்தால் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்றும் விஜய் வெளிப்படையாகவே அறிவித்திருப்பது அரசியல் வட்டாரத்திலே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் இந்த அறிவிப்புக்கு பல கட்சிகளும் வரவேற்பு தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.