விழுப்புரம் : விழுப்புரம் மந்தக்கரை அருகேயுள்ள அமைச்சார் அம்மன் கோவிலில் குடும்ப நலன் காக்க பெண்கள் நோன்பு விரதம் மேற்கொண்டு வருகின்றனர்.


தீபாவளி பண்டிகை


நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் மிக மிக முக்கியமானது தீபாவளி பண்டிகை ஆகும். பொதுமக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த தீபாவளி பண்டிகை இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகைக்கு பொதுமக்கள் காலையிலே உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடைகள் அணிந்து தீபாவளியை பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.


உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் செல்போன் மூலம் குறுஞ்செய்தி அனுப்பியும் தொலைபேசியில் தொடர்பு கொண்டும் தங்களது தீபாவளி வாழ்துகளை பறிமாறிக்கொண்டனர். அக்கம்பக்கத்தில் வசிக்கும் மக்கள் ஒருவொருக்கொருவர் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டு இனிப்பு,காரம்,முருக்கு,அதிரசம் வகைகளை பறிமாறிக்கொண்டனர்.


பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களாகவே தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு சிறுவர்களும், இளைஞர்களும் ஆர்வத்துடன் பட்டாசு வெடித்து வந்தனர். இன்று தீபாவளி பண்டிகை என்பதால் காலை முதலே பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.


அமைச்சார் அம்மன் கோவிலில் குடும்ப நலன் காக்க பெண்கள் விரதம்


அதன் படி விழுப்புரம் மந்தக்கரை அருகேயுள்ள அமைச்சார் அம்மன் கோவிலில் குடும்ப நலன் காக்க பெண்கள் விரதமிருந்து வழிப்பட்டு வருகின்றனர்.  நோன்பினை முன்னிட்டு அதிரசம், நோன்பு கயிறு, வாழைப்பழம் மஞ்சள், விபுதி உருண்டை, போன்ற மங்கள பொருட்களை வைத்து வழிபட்டு வருகின்றனர்.


கெளரி அம்மாள் என்பவர் சிவனை நோக்கி தவமிருந்து சிவனின் பாதியாக இருக்க வேண்டுமென கேட்டதின் பேரில் சிவன் வரன் அளித்ததாக புராணத்தில் கூறப்படுவதால் கேதார கொளரி நோன்பு கடைபிடிக்கபடுகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி விழுப்புரத்தில் பொதுமக்கள் உற்ச்சாகமாக பட்டாசு வெடித்து பண்டியை கொண்டாடி வருகின்றனர்.


தீபாவளி நோன்பு எடுக்க நல்ல நேரம்


31.10.2024 வியாழக்கிழமை மாலை 4.40 முதல் இரவு 7 மணி வரையிலும், இரவு 8.00 மணி முதல் 9 மணி வரையிலும்,


1.11.2024 வெள்ளிக்கிழமை காலை 6.00 மணி முதல் 9 மணி வரையிலும், காலை 10.00 மணி முதல் 10.30 மணி வரையிலும், மதியம் 1 மணி முதல் 3.00மணி வரையிலும் தீபாவளி நோன்பு எடுக்க மிக சிறந்த நல்ல நேரமாகும்.


நோன்பு விரதம் இருப்பது எப்படி?


இந்த விரதமே கௌரிதேவியைக் குறித்து நோற்கப்படும் விரதங்களில் மிக உயர்ந்ததாகும். இதனை தேவமாதர்கள் அனைவரும் கொண்டாடி அன்னையின் அருளைப் பெற்றதாகப் புராணங்கள் விளக்கும். முற்காலத்தில், கேதாரகௌரி விரதத்தின்போது, நீர்நிலைகளின் கரைகளில் வைத்து வழிபடுவது வழக்கம். தற்போது கோயில் வளாகங்களிலும், வீடுகளிலும் வைத்து இந்த வழிபாட்டை நிகழ்த்துகிறார்கள்.


பூஜை செய்யும் இடத்தில் ஒரு மேடை அமைத்து அதன்மீது பூரண கும்பத்தை அமைத்து வெள்ளைத் துணியை அணிவித்து, வெள்ளைக் கற்கள் இழைத்த ஆபரணங்களால் அலங்கரித்து, வெண்மையான மலர்களைச் சூட்ட வேண்டும்.


21 அதிரசங்கள் படைப்பது சிறப்பு


அந்தக் கௌரி கலசத்தின் மீது 21 முடிச்சுகளைக் கொண்ட நோன்புக் கயிற்றை வைத்துப் பூஜிக்கவேண்டும். வெண்தாமரை மலர்களால் பூஜிப்பது மிகவும் சிறப்பு. கேதாரத்தில் தேவி 21 நாட்கள் பூஜித்துச் சிவனருள் பெற்றதன் நினைவாக. அவளுக்கு இருபத்தோரு வெற்றிலை பாக்கு, இருபத்தோரு முறுக்கு என்று எல்லாவற்றையும் இருபத்தொன்றாகவே படைக்க வேண்டும். 21 அதிரசங்கள் படைப்பது சிறப்பு.


அம்பிகையை வழிபட்ட பின்பு, அவளுடைய இருபத்தோரு பெயர்களைக் கூறி, நோன்புக் கயிறுகளை பூஜித்து வந்து மணிக் கட்டில் கட்டிக்கொள்ள வேண்டும். பிறகு, அனைவரும் கூடி நீர் நிலைகளுக்குச் சென்று அகல் விளக்குகளை நீரில் விட்டுக் கௌரி கங்கையை பூஜிக்க வேண்டும்.


பிறகு, வீட்டில் குல தெய்வத்தை முறைப்படி பூஜித்து வணங்க வேண்டும். அதன்பிறகு திருமணமான பெண்கள் தங்கள் கணவருக் கும் குழந்தைகளுக்கும் நோன்புக் கயிறுகளைக் கட்டிவிட வேண்டும். திருமணமாகிச் சென்றுள்ள பெண்களுக்குப் பிறந்த வீட்டிலிருந்து அதிரசத்தையும் நோன்புக் கயிறுகளையும் அனுப்பிவைக்க வேண்டும்.


ஐப்பசி அமாவாசை அன்று கேதாரகெளரி விரதம் இருப்பது சிறப்பு


ஐப்பசி அமாவாசை அன்று கேதாரகெளரி விரதம் இருப்பது சிறப்பு. இந்த தினம் 21-வது நாளாக வரும்படி விரதம் மேற்கொள் வார்கள். நிறைவு நாளான ஐப்பசி அமாவாசை அன்று அம்பாளை வழிபடுவார்கள். சில தருணங்களில், தீபாவளி அனுஷ்டிக்கப்படும் அன்றே அமாவாசை வந்துவிடும் ஆகையால், அன்று மாலையில் விரதம் இருந்து வழிபடுவது உண்டு.