Diwali 2023 Holidays Tamil Nadu: 2023ஆம் ஆண்டு தீபாவளி ஞாயிற்றுக் கிழமை அன்று வருவதால், தமிழக அரசு அடுத்த நாள் விடுமுறை(Deepavali Leave 2023) அளித்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதற்கு பதிலாக நவம்பர் 28ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பண்டிகை கால கொண்டாட்டம்
பொதுவாகவே அரசு ஊழியர்கள், ஐ.டி. ஊழியர்கள் மற்றும் இதர துறைகளில் பணிபுரிபவர்கள் அதிகம் எதிர்பார்த்துக் காத்திருப்பது நீண்ட விடுமுறைகளைத்தான். வேலைக்காக ஊரை விட்டு ஊர் வந்து சென்னையில் பணிபுரிபவர்கள் எல்லோருக்குமே ஊருக்கு சென்று வர வேண்டிய ஆசை இருக்கும். குறிப்பாக பண்டிகைகளை சொந்த ஊரில் கொண்டாடினால்தான், விழா முழுமை பெற்ற உணர்வே ஏற்படும். அதனால், தீபாவளி, பொங்கல், அரசு விடுமுறை தினங்களுக்கு சென்னைவாசிகள் ஊருக்குச் செல்வது வழக்கம். இதனால் பேருந்துக் கட்டணங்களின் விலை கணிசமாக உயர்த்தப்படும். ரயில்களில் கூட்டம் அலைமோதும்.
இதற்கிடையே ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் தீபாவளி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு தீபாவளி நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த தினம் ஞாயிற்றுக் கிழமை அன்று வருகிறது. இதனால், தமிழக அரசு அடுத்த நாளான திங்கள் கிழமை அன்று விடுமுறை அளிக்க வேண்டும் என்று மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.
லட்சக்கணக்கான மக்கள் இடம் பெயர்வு
இந்நிலையில், தீபாவளி ஞாயிற்றுக் கிழமை அன்று வருவதால், தமிழக அரசு அடுத்த நாள் விடுமுறை அளிக்க வேண்டும் என்று அரசுக்கு ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், ’’இந்த ஆண்டு தீபாவளி திருநாள் எதிர்வரும் 12.11.2023 (ஞாயிறு) அன்று வருகின்றது. தீபாவளி கொண்டாட்டத்தையொட்டி தமிழ்நாடு முழுவதும் பல லட்சக்கணக்கான மக்கள் இடம் பெயர்வார்கள். தீபாவளி நோன்பு 13.11.2023 (திங்கள்) அன்று கொண்டாடப் படுகிறது.
இதனால் ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், மாணவர்கள் சொந்த ஊரிலிருந்து ஞாயிற்றுக் கிழமை இரவே புறப்பட வேண்டி உள்ளது. அனைவரும் குடும்பத்துடன் ஒரு நாள் கூடுதலாக செலவிடும் வகையில் 13.12.2023 (திங்கள்) அன்று தமிழ்நாடு அரசு பொது விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும்’’ என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் எல்லோரின் கோரிக்கையையும் ஏற்று, தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை(Diwali Holiday 2023 Tamil Nadu) அளித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதற்கு பதிலாக நவம்பர் 28ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மாணவர்கள், அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.