நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, பொதுமக்கள் தீபாவளியை கொண்டாட புத்தாடைகள், பட்டாசுகள் மற்றும் இனிப்பு, கார வகைகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க சுமார் 600 க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்த நிலையில் பாதுகாப்பு நலன் கருதி மாவட்ட நிர்வாகம் சார்பில் திறந்தவெளி இடங்களான போஸ் மைதானம் மற்றும் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மாநகராட்சி திடல் ஆகிய இரண்டு இடத்தில் மட்டும் மாநகர பகுதியில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைத்துக்கொள்ள அனுமதி அளித்துள்ளது. இதற்கு தற்காலிக பட்டாசு கடை விற்பனையாளர்கள் பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மாவட்ட நிர்வாகம் அனுமதித்துள்ள இடத்தில் பட்டாசு கடைகள் அமைக்க சில தற்காலிக பட்டாசு விற்பனையாளர்கள் முன்வந்ததை அடுத்து தற்போது போஸ் மைதானம் வளாகத்தில் பட்டாசு கடைகள் அமைத்து அதன் விற்பனையானது என்று தொடங்கியுள்ளது.



சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நகரப் பேருந்து நிலையம் மற்றும் மத்திய பேருந்து நிலையம் ஆகிய இரண்டு இடங்களில் தற்காலிக பட்டாசுக் கடைகளை சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அதிகாரிகளுடன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மத்திய பேருந்து நிலையம் அருகே மாநகராட்சித் திடலில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பட்டாசுக் கடைகள் விதிமுறைகளை கடைப்பிடிக்கும் வகையில் உள்ளதா என அதிகாரிகளிடம் கேட்டிருந்தார். திடலில் அமைக்கப்பட்டுள்ள கடைகளில் சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் உரிய விதிமுறைகளை பின்பற்றுகிறார்களா, வாடிக்கையாளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் அவர் கேட்டறிந்தார்.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், தமிழ்நாட்டில் அடுத்தடுத்த பட்டாசுக் கடைகளில் நேர்ந்த விபத்துகளைத் தொடர்ந்து நீதிமன்ற வழிகாட்டுதல்படி சேலம் மாநகர எல்லைக்குட்பட்ட 2 இடங்களில், மாநகர எல்லையொட்டிய இரும்பாலை சாலையிலும் நூற்றுக்கும் மேற்பட்ட பட்டாசுக் கடைகள், பொன்னி கூட்டுறவு சிறப்பங்காடி உள்பட சிவகாசியில் இருந்து நேரடி விற்பனை செய்யும் கடைகள் என அனைத்தும் ஒரே இடத்தில் அமைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு தரமான பட்டாசு குறைந்த விலையில் வாங்குவதற்கு ஏதுவாக இருக்கும். ஒவ்வொரு பகுதியிலும் பட்டாசு கடை என்ற நிலை மாறி, ஒரே இடத்தில் அமைக்கப்பட்டுள்ளதை தடையாக கருதாமல் அதை ஒரு கண்காட்சி போல நினைத்து பட்டாசுகளை வாங்கி தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடுமாறு அவர் தெரிவித்தார். மேலும், அனுமதியின்றி எவரும் பட்டாசுகளை விற்பனை செய்ய வாய்ப்பில்லை. அதுபோல நிகழ்வுகள் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கண்டறியட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்தார். 


சேலம் மாநகர பகுதியில் தற்காலிக பட்டாசு கடைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் பொது மக்களுக்கான குடிநீர், கழிப்பிட வசதி, வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் 24 மணி நேரமும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் தீயணைப்பு துறை சார்பில் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு மருத்துவர் உதவி வழங்கிடும் வகையில் 108 ஆம்புலன்ஸ் போன்றவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.