மதுரையில் இரவில் கொட்டி தீர்த்த கனமழையால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீர் - பாதாள சாக்கடை தொட்டியில் நிரம்பி வழிந்தோடிய கழிவு நீர்.
இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் தெற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இதன்படி கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.
அமைச்சர் மூர்த்தியின் சொந்த தொகுதியான மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சி 3ஆவது வார்டு பகுதியான ஆனையூர், தமிழ்நகர், கணபதிநகர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பெய்த கனமழை காரணமாக வீடுகளுக்குள் மழை நீர் கழிவு நீரோடு சேர்ந்து புகுந்துள்ளதால் வீட்டில் உள்ள பொருட்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் இரவு முழுவதிலும் வீடுகளுக்குள்ளே பொதுமக்கள் முடங்கிய நிலையில் வீடுகளுக்குள் இரவு நேரத்தில் பாம்பு வந்ததால் கடும் அச்சத்துடன் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் காலை மாநகராட்சியை தொடர்பு கொண்டு இதுகுறித்து புகார் அளித்த போது மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளாத நிலையில் அந்த பகுதி மக்கள் ஆனையூர் பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த சிலர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் ஒருவரை தாக்கினர். இதனால் அவருடன் பொதுமக்களும் இளைஞர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியபோதும் தொடர்ந்து தங்களது பகுதிக்கு மாநகராட்சி அதிகாரிகள் வந்து தேங்கிய நீரை அகற்றும் வரை போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறி ஒரு மணி நேரத்திற்கு மேலாகவும் தொடர்ந்து பெண்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதி முழுவதிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஏற்கனவே இதே பகுதியில் அமைச்சர் மூர்த்தி மற்றும் மேயர் வரும் பொழுதும் தண்ணீர் தேங்குவதாக கூறிய போது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் கூறி ஒரு ஆண்டு ஆகியும் உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில் இதுபோன்று மழைகாலத்தில் சிரமத்திற்கு ஆளாகின்றோம், மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளாத நிலையில் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இது குறித்து பேசிய பொதுமக்கள் இரவு முழுவதிலும் தூங்காமல் விடிய விடிய மழை நீரில் நனைந்து கொண்டிருந்தோம் பாம்புக்கு பயந்து கொண்டு இருக்கக்கூடிய சூழல் ஏற்பட்டது ஓட்டு கேட்க வந்தவர்கள் தண்ணி வந்திருச்சுன்னு சொன்னதுனால யாருமே வரதில்ல இனி ஓட்டு கேட்டு வந்த உள்ள விடமாட்டோம் என மனவேதனையை வெளிப்படுத்தினர்.
மேலும் போராட்டத்தில் ஈடுபடும் பொழுது இது போன்ற இளைஞர்களை தாக்குவது சரியா? தேவையான உரிமைக்காக போராடுபவர்களை அடிக்க வருகிறார்கள் என பெண்கள் வேதனையை வெளிப்படுத்தினர்.