ஊட்டசத்து நிபுணரும் நடிகர் சத்யராஜின் மகளுமான திவ்யா சத்யராஜ் ஆக்டிவ்வாக இன்ஸ்டாகிராமில் இயங்கி வருபவர் என்பது அவரைப் பின் தொடர்பவர்களுக்குத் தெரியும். தான் சாப்பிடும் உணவு முறை, தனது குடும்பத்தினரின் ஆரோக்கியம், ஹெல்த் டிப்ஸ் என ஆரோக்கியமான பதிவுகளைத் தொடர்ந்து பகிர்ந்து வருபவர் அவர். அண்மையில் தனது நோயாளி ஒருவரிடம் தனியார் மருத்துவமனையின் டாக்டர் அதிகக் கட்டணம் வசூலித்ததாகக் குற்றம்சாட்டியுள்ளார். 
அதுகுறித்து அவர் இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார். தனது பதிவில்,”





சென்னையில் உள்ள ஒரு முன்னணி தனியார் மருத்துவமனையின் பொது மருத்துவர் டாக்டர் சுப்பிரமணியன், கட்டுமான தளத்தில் வேலை செய்யும் ஏழைத் தொழிலாளியான எனது நோயாளியிடம் ஆலோசனைக் கட்டணமாக ரூ.5100 வசூலித்ததைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவர் தனது 7 வயது மகளை ஆலோசனைக்காக மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளார். நோயாளியை பரிசோதனை செய்தது வெறும் 3 நிமிடம். பணம் வசூலிப்பது மனிதநேயத்தை முந்திவிட்டதா??? பணக்காரக் குழந்தைக்கு நல்ல மருத்துவ வாய்ப்புகள் கிடைப்பதும் ஏழைக் குழந்தைக்கு அது மறுக்கப்படுவதும் நியாயமற்றது. அநியாயம் மற்றும் பரிதாபத்துக்குரியது. குறைந்த வருமானத்தில் வாழும் மக்களுக்கு நம்பிக்கையையும், நலத்தையும் தரும் ஒரு சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பு நமக்கு மிகவும் அவசியம். ஆரோக்கியம் உங்கள் உரிமை, அதற்கான போராட்டத்தை நீங்கள் கைவிடாதீர்கள்” என மருத்துவர் திவ்யா குறிப்பிட்டுள்ளார்.


மேலும் அதற்கான கேப்ஷனில், “எனக்கு மருத்துவர்கள் மீது எப்போதுமே மரியாதை உண்டு ஆனால் ஒரு மனிதனின் உடல்நலத்தை விடவா பணம் பெரிது என்பது மருத்துவர்கள் சுய ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்” என திவ்யா கூறியுள்ளார். திவ்யாவின் கருத்துக்கு பிக்பாஸ் புகழ் நடிகை ரேகா, ரைஸா வில்சன், நடிகை ஐஷ்வர்யா ராஜேஷ் ஆகியோர் வலுசேர்க்கும் விதமாகக் கருத்துத் தெரிவித்துள்ளனர்.


இதுகுறித்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது கமெண்ட்டில் ‘அபத்தமானது’ எனக் குறிப்பிட்டு மருத்துவரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 


திவ்யா சத்யராஜின் பதிவுக்கு சீரியல் நடிகை சுஜிதா கமெண்ட் செய்துள்ளார். அதில், “உங்கள் துணிச்சலுக்கு தலை வணங்குகிறேன். ஆம், இதை கட்டுப்படுத்த ஐஎம்ஏ, சுகாதார அமைச்சகம் தலையிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.