திரிபுரா மாநிலத்தில் தீவிரவாத தாக்குதலில் குண்டடிபட்டு பேரையூர் அருகே பழையூரைச் சேர்ந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் வீரமரணம் அடைந்தார். அவரது உடல் சொந்த ஊரில் ஆயுதப்படை காவலர்கள் 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

 

மதுரை மாவட்டம் பேரையூரை அடுத்து பழையூரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் கமலரங்கன் (38 வயது) எல்லை பாதுகாப்பு படை வீரராக பணி செய்து வருகிறார். கமலரங்கனுக்கு பிரியா என்ற மனைவியும், 5 வயதில் ஆண் குழந்தையும், 3 வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். கமலரங்கன்  2004 ஆம் ஆண்டு எல்லை பாதுகாப்பு படை வீரர் பணியில் சேர்ந்தார். தற்போது திரிபுரா  மாநிலம் அகர்தலாவிலிருந்து 150 கிமீ தொலைவில் உள்ள சி.கே.பாடி மலைபகுதியில்  எல்லை பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வருகிறார்.



இந்நிலையில் கடந்த  புதன்கிழமை இரவு தீவிரவாதிகள் சுட்டதில் உடலில் குண்டு பாய்ந்து  கமலரங்கன் வீர மரணம் அடைந்தார். கமலரங்கன் எல்லை பாதுகாப்பு படை வீரர் பணிமுடிய இன்னும் இரண்டு ஆண்டுகளே உள்ள நிலையில் கமலரங்கன் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரையும், கிராம மக்களையும் பெரும் சோகத்திற்கு தள்ளியுள்ளது. இந்நிலையில் நேற்று இறந்த  கமலரங்கன் சடலம் சொந்த ஊரான பழையூருக்கு கொல்கத்தாவில் இருந்து விமானம் மூலம் பெங்களூரு கொண்டு வரப்பட்டது. பெங்களூரிலிருந்து எல்லை பாதுகாப்பு படை வாகனத்தில் கொண்டுவந்தனர்.



தொடர்ந்து பழையூர் மயானத்தில்  கமலரங்கன் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன், முன்னாள் எம்.எல்.ஏ மகேந்திரன்  உட்பட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், பேரையூர் காவல் துணை கண்காணிப்பாளர் சரோஜா, சாப்டூர்காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மணிமொழி உட்பட காவல்துறை அதிகாரிகளும்,பழனியம்மாள் ராணுவ பயிற்சி பள்ளி மாணவர்களும், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும்  வார்டு உறுப்பினர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து மதுரை ஆயுதப்படை காவலர்கள்  21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தினர். உறவினர்கள் இறுதிச் சடங்கு செய்த பின்னர் பழையூர் மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது. தீவிரவாத தாக்குதலில் எல்லைப் பாதுகாப்பு படை வீரர் உயிர் இழந்த சம்பவம் பழையூர் கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.