கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள கவிமணி அரசு தொடக்கப்பள்ளியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் தனது 5 வயது மகனை சேர்த்துள்ளது மாவட்ட மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகள் தரம் உயர்ந்து உள்ளதாகவும் அரசின் பல சிறப்பு திட்டங்களால் மாணவ மாணவிகள் பெரிதும் பயன்பெற்று வருவதால் மாணவர் சேர்க்கை அதிகரித்து உள்ளதாக ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளை தரம் உயர்த்தி மேம்படுத்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நாளுக்கு நாள் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் தனது மகனை நாகர்கோவிலில் உள்ள கவிமணி அரசு தொடக்கப்பள்ளியில் சேர்த்துள்ளார். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஹரி கிரண் பிரசாத் கடந்த 26ஆம் தேதி குமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக்கொண்டார். விவசாய குடும்பத்தை சேர்ந்த இவர் தனது தாய் மற்றும் தந்தை ஆகியோருக்கு முதல் சல்யூட் அடித்து தனது பணியை தொடங்கினார்.
காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் புகார் மனுக்கள் உடனடியாக உரிய முறையில் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். தற்போது கவிமணி அரசு தொடக்கப் பள்ளியில் முதல் வகுப்பில் தனது மகன் நிஸ்விக்கை சேர்த்துள்ளார். இது அப்பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் மற்றும் பொது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு அதிகாரிகள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்த்தால் அரசு பள்ளிகளின் தரம் உயரும் என்ற சொல்லுக்கு எடுத்துக்காட்டாக மாவட்டத்தில் உள்ள முக்கிய அதிகாரியான ஒருவர் தனது குழந்தையை அரசுப் பள்ளியில் தந்து குழந்தையை சேர்ந்து இருப்பது மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
இதுகுறித்து தலைமை ஆசிரியர் கமலா கூறுகையில்,கவிமணி அரசு பள்ளி என்பது நாகர்கோவிலில் மிகவும் முக்கியம் வாய்ந்த பள்ளியாக உள்ளது இந்தப் பள்ளியில் 542 குழந்தைகள் தற்போது கல்வி பயின்று வருகின்றனர் இவர்களுக்கு பள்ளி சார்பில் சிறந்த கல்வி அளிக்கப்பட்டு வருகிறது தற்போது இந்த பள்ளிக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனது குழந்தையின் இந்த பள்ளியில் சேர்த்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இதன் மூலம் பொதுமக்களுக்கு நல்ல விழிப்புணர்வு சென்றடையும் எனவும் தமிழக அரசின் நல்ல பல திட்டங்களை அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகள் பெரிதும் பயன் பெற்று வருவதாகவும் இதனால் மாணவர் சேர்க்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார்.