தமிழ் சினிமாவின் ஒப்பற்ற எதார்த்தமான கலைஞன் நடிகர் பாண்டு. காமெடி மற்றும் குணச்சித்திர கேரக்டர்களில் எண்ணற்ற படங்களில் நடித்திருப்பவர். முக்கியமாக இயக்குநர் வாசுவின் 'பணக்காரன்' 'நடிகன்' 'சின்னதம்பி'னு பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் பாண்டு நடித்திருப்பவர். பாண்டு பற்றிய நினைவலைகளை நம்மிடம் பகிர்ந்து கொண்டார் இயக்குநர் பி.வாசு. 



'' பாண்டுவின் மரணம் தாங்க முடியாத துக்கம். முதல்ல எனக்கு நல்ல நண்பர். பிறகுதான் நடிகர். எப்பவும் சிரிச்சிக்கிட்டே இருப்பார். நல்ல பேசி பழக கூடியவர். சின்னவரா இருந்தாலும் அண்ணன்னுதான் கூப்பிடுவார். மரியாதையா தான் பேசுவார். யாரையும் பேர் சொல்லி கூப்பிட மாட்டார். எல்லார் முன்னாடியும் வாசு அண்ணன்னுதான் கூப்பிடுவார். யார் இல்லாதப்போ 'வாசு'னு அன்பா கூப்பிட்டு பேசுவார். 'கேப்பிட்டல் லெட்டர்ஸ்'னு மிகப்பெரிய கலையை கூடவே வெச்சிருந்தார். இவர் யார்கிட்டாவது பெயர் பலகை ரெடி பண்ணி கொடுத்தார்னா, வாங்குனா பெர்சனாலிட்டி பெருசா நல்லா வருவாங்க. இதை எல்லாரும் சென்டிமென்ட்டா பார்த்தாங்க. 


'ஃபிலிம் டைரக்டர் பி.வாசு'னு எழுதி போர்ட் மாத்தியவர் பாண்டுதான். என்னோட வீட்டோட கமலம் இல்லம்னு எழுதி கொடுத்தவரும் இவர்தான். அம்மா பேர்லதான் வீட்டுக்கு வெச்சிருக்கேன். நண்பர்களுக்கு முழு மனசோட எழுதி கொடுப்பார். ரொம்ப லக்கி ஹேண்ட் கொண்டவர். 'சின்னதம்பி' படத்தோட லொகேஷன் குமாராபாளையத்துக்கு என்னை கூப்பிட்டு போனார். ஏன்னா, இவருடைய சொந்த ஊர் இதுதான். இதனால, ஷூட்டிங் அப்போல்லாம் எனக்கு பெரும் உதவியா இருந்தார். முக்கியமா, படத்துல காட்டுனா எஸ்.எஸ்.எம் பேக்டரி இவர் அறிமுகப்படுத்தி வெச்சதுதான். எல்லாரும் ஒரே ஊர்க்காரங்கனால பாண்டு மூலமா நிறைய உதவிகளை ஊர்காரங்க ஃபேக்டரிகாரங்க செஞ்சாங்க.


ஒரு பெரிய பழக்கம் இந்த ஃபேக்டரிகாரங்க மூலமா ஏற்பட்டுச்சு. இதுல ஒருத்தர்தான் மதிவாணன். பிரபுவும் மதிவாணனும் நெருங்கிய நண்பர்கள் ஆனாங்க. இன்னும் சில வருடங்களுக்கு பிறகு இவங்க ரெண்டு பேரும் சம்பந்தி வீட்டார் ஆகிட்டாங்க. விக்ரம் பிரபு மனைவி லட்சுமியும் இப்போ தம்பதிகளாக இருந்துட்டு வர்றாங்க. இந்த திருமணத்துக்கு ஏதோ ஒரு வகையில பாண்டு காரணமா இருந்திருக்கார். எனக்கும் நல்ல குடும்ப நண்பர்களாக மதிவாணன் குடும்பம் இருந்ததுக்கு பாண்டுதான் காரணம். 



பாண்டுவின் இறப்பு செய்தி இதெல்லாம் எனக்கு ஞாபகப்படுத்திட்டு இருக்கு. காலையில இருந்து எல்லாத்தையும் நினைச்சுக்கிட்டு இருக்கேன். என்னோட பெரும்பாலான படங்களில் பாண்டு இருந்திருக்கார். இவருடைய இறப்பு செய்தி கேட்டவுடன் சந்தானபாரதிக்கு போன் பண்ணுனேன். ஏன்னா, பாரதி ஒரு வாரத்துக்கு முன்னாடி பாண்டுக்கிட்ட பேசியிருக்கார். 'என்ன சொல்றதுனே தெரியலனு' பாரதி வருத்தப்பட்டு சொன்னார். இந்த கோவிட் நேரத்துல நல்ல மனிதர்கள் எல்லாத்தையும் இழந்துட்டு வரோம். சினிமா வட்டாரத்தையும் தாண்டி எந்தவொரு மனிதரும் இந்த மாதிரியான மரணத்தை சந்திக்கக்கூடாது. ஏன்னா, ஜீரணிக்க முடியாத ஒன்னா இருக்கு. இயற்கையான நேரத்துல இறக்க கூடிய மனிதர்களை பார்த்து இறுதிச்சடங்கு செய்ய முடியும். ஆனா, கொரோனா தொற்றால் இறந்தவர்களுக்கு இது கூட செய்ய முடியல. மிகப்பெரிய தண்டனையை நமக்கு கொடுத்துட்டு போறாங்க. பொருளாதார இழப்பு தாண்டி நண்பர்களுடைய இறப்பு ஜீரணிக்க முடியாமல் கடந்து போயிட்டு இருக்கோம் '' என்றார் வருத்ததுடன்.