திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள படவீடு கிராமத்தில் உள்ள ஸ்ரீ ரேணுகாம்பாள் கோவில் மிகவும் பிரசித்த பெற்றதாகும் . தொண்டை மண்டலத்தில் சக்தி வாய்ந்த ஆலயங்களில் ஒன்றான படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் ஆலயம் கமண்டல நதி ஆற்றங்கரை அருகில் அமைந்துள்ளது. பிரம்மா, விஷ்ணு ,சிவன் ஆகிய மும்மூர்த்திகளை உள்ளடக்கிய ரேணுகாம்பாள் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றார். மேலும் ஆண்டுதோறும் ஆடி வெள்ளிக்கிழமைகளில் இந்த ஸ்ரீரேணுகாம்பாள் ஆலயத்தில் கெடா வெட்டி பொங்கல் வைத்து பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தி வழிபடுவார்கள்.
வடதமிழகத்தில் பெரும்பாலோனா பக்தர்களுக்கு படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் அம்மன் குலதெய்வமாகவும் விளங்கி வருகிறது. மேலும் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான இந்த திருக்கோயிலில் ராஜகோபுரம் அமைத்து தற்போது புனரமைக்கும் பணி நடைபெற்றது. கடந்த 2ஆம் தேதியிலிருந்து கணபதி ஹோமம் ,நவகிரக ஹோமம் ,லட்சுமி ஹோமம், கோபூஜை , பரஹமசாரி பூஜைகள் நடைப்பெற்றது. அதனைத் தொடர்ந்து 3ஆம் தேதி சாந்தி ஹோமம் திசா, ஹோமம் அக்னி ஸங்க்காஹணம் சிறப்பு பூஜை செய்து யாக சாலை அமைத்து முதற்காலை பூஜை செய்தனர். இதனை தொடர்ந்து மறுநாள் 2ஆம் காலபூஜை, 3ஆம் கால பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்நிலையில் இன்று காலையில் 6ஆம் கால பூஜை அவப்பருதயாகம் மஹாபூர்ணாஹீத் யாத்ராதானம் உள்ளிட்டவைகள் சிறப்பாக நடைபெற்றது. இந்தியாவில் உள்ள புண்ணிய நதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரை கொண்டு புனரமைக்கபட்ட ராஜகோபுரத்திற்கு கும்பாபிஷேகம் மற்றும் குடமுழுக்கு விழா வெகுவிமரிசையாக கொண்டாபட்டது.
இந்த குடமுழுக்கு விழாவில் தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி மற்றும் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி. என். அண்ணாதுரை, கலசப்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினர் சரவணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றனர்.
புனித நீரை பக்தர்கள் மீது தெளித்தபோது பக்தி பரசவத்துடன் அம்மனை வழிபட்டனர். இதில் திருவண்ணாமலை ,வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மகா கும்பாபிஷேகம் விழாவில் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர். இந்த கும்பாபிஷேகத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இறுதியில் பக்தர்களுக்கு ஆலயம் சார்பில் அன்னதானம் வழங்கபட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்