விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 33 மாத திமுக ஆட்சியில் மக்கள் வேதனை அடைந்துள்ளதாக சிவி.சண்முகம் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.


திண்டிவனம் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இவற்றில் பாதாள சாக்கடை பணிகள் நிறைவேற்றப்படவில்லை, சாலை அமைக்கப்படவில்லை, குடிநீர், தெருவுக்கு உள்ளிட்ட பொதுமக்களுக்கு தேவையான எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை என்றும் நகராட்சி நிர்வாகம் முடங்கி இருப்பதாக குற்றம் சாட்சி அதிமுக சார்பில் காந்தி சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டு நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.


தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம்:


நேற்று ஸ்டாலின் வருகிறார் விடியல் தரப்போகிறார் என பேசினார்கள். ஆனால் திமுகவுக்கும், ஸ்டாலின் குடும்பம் தான் வளர்ச்சி அடைந்தது. தற்போது மீண்டும் ஸ்டாலின் குரல் என பேசி வருகிறார்கள். திமுக கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. திமுக அரசு பொறுப்பேற்று 33 மாதங்கள் ஆகிறது, இந்த 33 மாதங்களில் சாதனை எதுவும் இல்லை, இது மக்களுக்கு சோதனையும், ஏமாற்றமும் தான் மிஞ்சியுள்ளது.


சஹாரா பாலைவனம்


திண்டிவனம் நகராட்சியில் எந்த வித அடிப்படை வசதிகளும் செய்து தராமல் நகராட்சி நிர்வாகம் ஸ்தம்பித்துப் போய் உள்ளது. திண்டிவனம் நகர் முழுவதும் புழுதி பறக்கிறது. சஹாரா பாலைவனம் போல திண்டிவனம் நகரம் மாறிவிட்டது. இதற்கு நகராட்சி நிர்வாகமும், நகர மன்ற தலைவரும், ஆணையரம்தான் காரணம். திமுக நகரமன்ற தலைவர் செய்யும் அனைத்து தவறுகளுக்கும் நகராட்சி ஆணையரும் பதில் சொல்ல வேண்டும் என பேசினார்.