அதிக குழந்தைகளைப் பெற்றெடுக்கும்படி தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சொன்னதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. உண்மையில் அவர் அப்படி சொன்னாரா என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.
திருமண விழாவில் ஸ்டாலின் பேசியது என்ன?
சென்னை திருவான்மியூரில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 31 ஜோடிகளுக்கு இன்று திருமணம் நடத்தப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த திருமணம் நடைபெற்றது. திருமணம் செய்து கொண்ட 31 ஜோடிகளுக்கும் தலா ரூ.60,000 மதிப்பிலான பொருட்களை தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சீர்வரிசையாக வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்டாலின், "இப்போது யாரும் 16 பெற்று பெருவாழ்வு வாழுங்கள் என்று வாழ்த்துவது இல்லை. 'அளவோடு பெற்று வளமோடு வாழுங்கள்' என்றுதான் வாழ்த்துகிறோம்
ஆனால், இன்று மக்கள்தொகையை அடிப்படையாக வைத்து நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கைக் குறைகின்றபோது, 'நாம் ஏன் அளவோடு பெற்றுக்கொள்ள வேண்டும். பதினாறு பெற்றுக்கொள்ளுங்கள்' என்று சொல்லக் கூடிய நிலைதான் இப்போது வந்திருக்கிறது" என தெரிவித்திருந்தார்.
தென் இந்தியாவில் மக்கள் தொகை குறைந்து வருகிறதா?
ஆனால், அதிக குழந்தைகளைப் பெற்றெடுக்கும்படி தமிழக முதல்வர் சொன்னதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இப்படிப்பட்ட கருத்தை தெரிவித்தது தமிழ்நாடு முதலமைச்சர் அல்ல. ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆவார்.
"தென் இந்தியாவில் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்பதால் தம்பதிகள் அதிக குழந்தைகள் பெற்றெடுக்க வேண்டும். 2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள்தான் ஊராட்சி தேர்தலில் போட்டியிட தகுதி உடையவர்கள் என்ற சட்டத்தை கொண்டு வர யோசனை உள்ளது" என சந்திரபாபு நாயுடு தெரிவித்திருந்தார்.
சந்திரபாபு நாயுடு தெரிவிப்பது போல் தென் இந்தியாவில் மக்கள் தொகை தொடர்ந்து குறைந்து வருகிறது. ஆனால், வட இந்தியாவை பொறுத்தவரையில், மக்கள் தொகை என்பது அதிகரித்து வருகிறது அல்லது நிலையாக இருக்கிறது என சொல்லலாம்.
பிறப்பு விகிதம் அதிகம் உள்ள மாநிலங்களில் முதல் இடத்தில் பீகார் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக, உத்தரப் பிரதேசமும் மூன்றாம் இடத்தில் மத்தியப் பிரதேசமும் உள்ளது.
இதையும் படிக்க: ABP Southern Rising Summit 2024: தெற்கின் குரலை ஓங்கி ஒலிக்கும், ஏபிபி நெட்வர்க்கின் சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு - இந்த முறை ஐதராபாத்தில்..!