தருமபுரி ஆதினத்திற்கான பட்டண பிரவேச நிகழ்வில் ஆதினத்தை பல்லக்கில் வைத்து தூக்கிச் செல்லக்கூடாது என்று தமிழக அரசு தடை விதித்தது. இதற்கு இந்து அமைப்புகள் சில எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், பட்டண பிரவேச நிகழ்வை சுமூகமாக நடத்தவும் கோரிக்கை விடுத்தன. கடந்த சில நாட்களாக இந்த விவகாரம் பேசுபொருளாகிய நிலையில், தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனையை முன்னிட்டு குன்றக்குடி ஆதினம், மயிலம் ஆதினம், கோவை பேரூர் ஆதினம் ஆகியோர் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசினர்.
இந்த பேச்சுவார்த்தையின்போது தருமபுரி ஆதினம் பட்டின பிரவேச நிகழ்வில் அரசியல் தலையீடு தேவையில்லை என்றும், பட்டண பிரவேச நிகழ்ச்சியை நடத்த தமிழக அரசு ஆவண செய்வதாக முதலமைச்சர் உறுதியளித்தார் என்றும் கூறியுள்ளார். மேலும், அமைச்சர்கள் சுதந்திரமாக நடமாட முடியாது என்று மன்னார்குடி ஜீயர் அவ்வாறு பேசியதை தவிர்த்திருக்கலாம் என்றும் அவர் கூறினார்.
இந்த நிலையில், பட்டண பிரவேசம் நடத்த தமிழக முதலமைச்சர் வாய்மொழியாக அனுமதி வழங்கியதாக தருமபுரம் ஆதினம் பேட்டி அளித்துள்ளார். மயிலாடுதுறை குத்தாலத்தில் கோயில் குடமுழுக்கு விழா ஒன்று நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமா சன்னிதானம் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் பட்டண பிரவேசம் நிகழ்ச்சி வாய்மொழியாக அனுமதி வழங்கியதாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
தருமபுரம் ஆதின பட்டண பிரவேச நிகழ்வில் பல்லக்கு தூக்கத் தடை விதித்துள்ள நிலையில், அனுமதி அளிக்கப்பட்டதாக தருமபுரம் ஆதினம் பேட்டி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்