சென்னை, நுங்கம்பாக்கத்தில் நடைபெற்றப் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவை தீவிரவாத இயக்கங்களுக்குப் பின்புலமாக இருப்பதாக கருத்து தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதில், சென்னை, நுங்கம்பாக்கத்தில் நடைபெற்றப் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா இயக்கம் குறித்து தெரிவித்தக் கருத்துகள் அதிர்ச்சியளிக்கின்றன. நாடறியப்பட்ட மக்கள் இயக்கமான பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவை தீவிரவாத இயக்கங்களுக்குப் பின்புலமாக இருப்பதாகவும், ஆபத்தான இயக்கமென்றும் கூறி, அவதூறு பரப்பியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
இயற்கைச்சீற்றங்களினால் மக்கள் இன்னல்களுக்கு ஆளாகும்போதும், கொரோனா நோய்த்தொற்று போன்ற பேரிடர் காலங்களின்போதும் மதத்திற்கு அப்பாற்பட்டு மனிதம் காக்க, மக்கள் சேவையாற்றி, வடகிழக்கு மாநிலங்களில் ஏழைக்குழந்தைகளின் கல்விக்கு உதவி, உன்னதப்பணிகளைச் செய்து வரும் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா மீது ஆளுநர் ஆர்.என்.ரவி உமிழ்ந்திருக்கும் கருத்துகள் மிகுந்த உள்நோக்கம் கொண்டவையாகும். நோய்த்தொற்றுக்காலத்திலும், 'கொரோனா ஜிகாத்' என இசுலாமிய மக்கள் மீது பழிபோட்டு, மதஒதுக்கலைச் செய்ய முற்பட்டு நாட்டைத் துண்டாட முயலும் ஆர்.எஸ்.எஸ்., பாஜகவை வெளிப்படையாக ஆதரித்து, அதன் உறுப்பினர் போல மாறி நிற்கும் ஆளுநருக்கு பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் மக்கள் சேவை செயல்பாடுகளும், பெரும்பணிகளும் தீவிரவாதமாகத் தெரிவதில் வியப்பில்லை. எவ்வித அடிப்படையுமின்றி, அபத்தமான ஒரு வாதத்தை முன்வைத்து, தமிழகத்தில் மதரீதியிலானப் பிளவை ஏற்படுத்த முயலும் ஆளுநரின் நோக்கங்கள் மிக ஆபத்தானவையாகும்.
துளியும் பொறுப்புணர்ச்சியின்றி, ஆளுநரா? ஆர்.எஸ்.எஸ்.ஸின் பரப்புரையாளரா? எனும் கேட்குமளவுக்கு கருத்துகளையும், செயல்பாடுகளையும் வெளிப்படையாக முன்னெடுத்து வரும் ஆளுநர் ஆர்.என்.ரவியின் போக்குகள் யாவும் வெட்கக்கேடானது.
ஆளுநர் மாளிகையை சங் பரிவாரங்களின் பரப்புரைக்கூடாரமாக மாற்றி, தமிழகச் சட்டமன்றத்தின் மாண்புகளைக் குலைத்து, நாளும் அதிகாரத்தலையீடும், அத்துமீறலும் செய்து, மதப்பூசலை தமிழகத்திற்குள் ஏற்படுத்த முயலும் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களுக்கு, ‘இது நாகலாந்து அல்ல; ஆரியத்தை வீரியமாய் எதிர்த்துப் போர் செய்து வென்றிட்ட வீரம்செறிந்த தமிழ்நாடு' என்பதை நினைவூட்டுகிறோம் என்று அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்