தர்மபுரி, கிருஷ்ணகிரி கிழக்கு மற்றும் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ஜ.க பொறுப்பாளர் பாக்யராஜ் ராஜினாமா செய்துள்ளார். 


இது தொடர்பாக அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் “தர்மபுரி, கிருஷ்ணகிரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட கோட்ட பொறுப்பாளர் (சமூக ஊடக பிரிவு மற்றும் தொழில்நுட்ப பிரிவு) பதவியிலிருந்தும், பாரதிய ஜனதா கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் மிக்க மகிழ்ச்சியுடன் ராஜினாமா செய்கின்றேன். தம்பி திரு.அண்ணாமலை அவர்களுக்கு சகோதரர் திரு. CTR. நிர்மல்குமார் அவர்களின் வளர்ச்சியை சகித்துக் கொள்ள முடிய வில்லை. ஆதலால் அவரை வெளியேற்ற வேண்டும் என்ற ஒரே முடிவில் இருந்தார். ஏன் என்றால் தன் இடத்திற்கு வந்து விடுவார் என்ற அச்சம். தம்பி திரு.அண்ணாமலை அவர்கள் கடந்த மாதம் (பிப்ரவரி) டில்லி செல்வதற்கு ஒருமணி நேரத்திற்கு முன்பு IT Wing மற்றும் sports and skill development ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகளிடம் சர்வாதிகாரி போல் அரசியல் முதிர்வு இல்லாமல் நடந்து கொண்டதினால் தங்களுக்கு நேர் எதிர் குணம் கொண்ட பொறுமை, நிதானம், பண்பு, அன்பு, பாசம், தெளிவு மற்றும் அரசியலுக்கான சகிப்புத்தன்மை உள்ள C.T.R. நிர்மல்குமார் அவர்களின் வழியில் பயணிப்பதில் மகிழ்ச்சி” என குறிப்பிடப்பட்டுள்ளது. 


சமீப காலமாக பா.ஜ.கவிலிருந்து பலரும் ராஜினாமா செய்து வருகின்றனர். முதலில் CTR. நிர்மல்குமார் - ஐ.டி விங் தலைவர் பொருப்பிலிருந்தும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் ராஜினாமா செய்தார். இதற்கு முன் காயத்ரி ரகுராம் கட்சியிலிருந்து விலகினார். அடுத்தடுத்து அனைவரும் கட்சியிலிருந்து விலகியதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. CTR. நிர்மல்குமார் பா.ஜ.க.விலிருந்து விலகி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவில் இணைந்தார். 


பா.ஜ.க நிர்வாகிகள் அதிமுகவில் இணைவது தொடர்பாக அண்ணாமலை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவை விமர்சித்து கருத்து தெரிவித்தார். இதனால் இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. இது நடந்து முடிந்த சில மணி நேரத்தில் பா.ஜ.க. விலிருந்து 13 பேர் - ஐ.டி விங் சேர்ந்தவர்கள் ராஜினாமா செய்தனர். 


கூண்டாக 13 பேர் ராஜினாமா செய்தது பொரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்படி பா.ஜ.கவிலிருந்து வரிசையாக நிர்வாகிகள் ராஜினாமா செய்து வரும் நிலையில், பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்பட்டு வருகிறது. ஆனால் அண்ணாமலை கூறுகையில், கட்சியிலிருந்து யார் விலகினாலும் கவலையில்லை, தலைவர் பொறுப்பில் ஒரு சில முடிவுகள் எடுக்கும் போது சிலர் கட்சியிலிருந்து விலகத்தான் செய்வார்கள் என கூறியுள்ளார்.