தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த தென்கரை கோட்டை பாத்திமா நகர், கர்த்தானூர், வடகரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கால்நடைகள் சில மாதங்களுக்கு முன்பு கோமாரி, அம்மை நோய் மற்றும் மர்ம காய்ச்சலால் தொடர்ந்து கால்நடைகள் உயிரிழந்து வந்ததது.
இந்நிலையில் கால்நடைகள் மர்ம நோயால் உயிரிழக்காமல் இருக்க பாத்திமா நகரில் உள்ள கார்மேல் அன்னை ஆலயத்தில் தருமபுரி மறை மாவட்ட ஆயர் மேதகு லாரன்ஸ் பயஸ் தலைமையில் கார்மேல் அன்னை ஆலய பங்குதந்தை வினோத் லூயிஸ் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை செய்தனர். தொடர்ந்து கிறிஸ்தவ தேவாலயத்தில், கால்நடைகள் அலங்கரித்து, பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர். அதனை தொடர்ந்து. கால்நடைகளுக்கு ஜெபம் செய்து, தீர்த்தம் தெளித்து படையல் வழங்கினர். இந்த பொங்கல் விழாவில் ஏராளமான கிறித்தவ மக்கள் கலந்து கொண்டனர். மேலும் பாத்திமா நகரில் உள்ள கார்மேல் அன்னை ஆலயத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு தருமபுரி மறை மாவட்ட ஆயர் மேதகு லாரன்ஸ் பயஸ் கொரோனா நிவாரண பொருட்களை வழங்கினார்.
பூக்களின் விலை கடும் வீழ்ச்சி - சாலையில் கொட்டப்பட்ட சம்பங்கி, பட்டன் ரோஸ் பூக்கள்
தருமபுரி மாவட்டத்தில் சுமார் 1500 ஏக்கர் பரப்பளவில் சம்பங்கி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சம்பங்கி விதை கிழங்கு சாகுபடி செய்த ஆறு மாதத்தில் பூ பிடிக்க ஆரம்பிக்கிறது. இதில் ஏக்கருக்கு 5 முதல் 6 டன் வரை மகசூல் கிடைக்கிறது. தொடர்ந்து ஆண்டு முழுவதும் சீரான நிலையில் 40 முதல் 50 ரூபாய் வரை கிடைக்கிறது. இதனால் வழக்கமாக மார்கழி மாதத்தில் கோயில் விசேஷங்களுக்கும், தொடர்ந்து தை மாதத்தில் திருமண நிகழ்ச்சி களுக்கும் சம்பங்கி பூக்களின் பயன்பாடு அதிகரிக்கிறது. எனவே மார்கழி, தை மாதத்தில் மகசூல் கிடைக்கும் வகையில் விவசாயிகள் சம்பங்கி பூக்களை சாகுபடி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் கோயிலில் வழிபட அரசு தடை விதித்துள்ளது. மேலும் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் எதிரொலியாக சம்பங்கி பூக்களின் விலை குறைந்து கிலோ 10 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதனால் தருமபுரி பூ மார்க்கெட்டுக்கு பூக்களை எடுத்து வரும் விவசாயிகள் போதிய விலை கிடைக்காததால், சாலையோரம் பூக்களை கொட்டிவிட்டுச் செல்கின்றனர். தருமபுரி அடுத்த சோகத்தூர் அருகே சுமார் 5 டன் அளவில் சம்பங்கி மற்றும் பட்டன் ரோஸ் பூக்களை விவசாயிகள் மூட்டை மூட்டையாக கொட்டி விட்டு செல்கின்றனர். தற்போது கோயில்களில் வழிபட தடை வித்திருப்பதால் பூக்கள் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் போதிய வருவாய் கிடைக்கவில்லை என விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.